கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி
கோவை
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது.
தேர்தல் பணி தீவிரம்
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வருகிற 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது.
இந்த தேர்தலில் வாக்களிக்கும் இறுதி வாக்காளர்களின் பட்டியல் மற்றும் கடந்த 22-ந் தேதி துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது. அதில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 20,844 பேர் புதிய வாக்காளர்கள் ஆவர்.
வாக்காளர்களுக்கு கையுறை
கோவை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மண்டல தேர்தல் அதிகாரிகள், நுண் பார்வையாளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 27 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். இதுதவிர போலீசார் மற்றும் துணை ராணு வத்தினர், முன்னாள் ராணுவ வீரர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுகிறார்கள்.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த தேர்தலில் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களுக்கு கையுறை (வலது கைக்கு மட்டும்) வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இதற்காக கோவை மாவட்டத்துக்கு சென்னையில் இருந்து 60 லட்சம் கையுறைகள் கொண்டுவரப்பட்டன.
பெயர், சின்னம் பொருத்துதல்
மேலும் சானிடைசர் பாட்டில்கள், தெர்மல் ஸ்கேனர், கை விரல்களில் வைக்கும் மை, வேட்பாளர்களின் பெயர்கள், கட்சியின் சின்னங்கள் அச்சடிக்கப்பட்டு அந்ததந்த தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் கோவையில் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னங்களை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.
கோவை சித்தாபுதூரில் உள்ள பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, நிர்மலா கல்லூரி உள்பட பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
கலெக்டர் ஆய்வு
அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப் பட்டு உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப் பட்டு இருந்த அறையில் இருந்து வெளியே எடுத்து வந்தனர்.
இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், அதற்கு நேராக வேட்பாளர்களின் புகைப்படம் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்டன. இவை சரியாக பொருத்தப்பட்டு உள்ளதா? என்று அந்தந்த வேட்பாளர்களின் முகவர்கள் சரிபார்த்தனர். முன்னதாக இந்த பணிகள் நடைபெறும் மையங்களில் கலெக்டர் நாகராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story