மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் மீட்பு
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சிக்கிய கல்லூரி மாணவர்களை 3 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் மீட்டனர்.
மேட்டுப்பாளையம்
கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் செல்லபாண்டியன். இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சக மாணவர்கள் 17 பேருடன் மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை அருகே உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்கச்சென்றனர்.
அதேபோல் மேட்டுப்பாளையம் சிவன்புரம் காலனியை சேர்ந்த 4 பேரும் குளிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் ஆற்றின் நடு பகுதியில் உள்ள திட்டு பகுதியில் குளித்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் மாலை 5 மணியளவில் பில்லூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் ஆற்றின் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 3 மணி நேரம் போராடி பரிசல் மூலம் கல்லூரி மாணவர்கள் உள்பட அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
Related Tags :
Next Story