தி.மு.க. ஆட்சி காலத்தில் மறுமலர்ச்சி அடைந்த ஆத்தூர் தொகுதி முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. பேட்டி
குடிநீர், மலைப்பாதை வசதி செய்து கொடுத்து தி.மு.க. ஆட்சி காலத்தில் ஆத்தூர் தொகுதி மறுமலர்ச்சி பெற்றது என்று முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
கன்னிவாடி,
ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2 ஊராட்சி ஒன்றியங்கள், 7 பேரூராட்சிகள், 47 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு வசிக்கிற மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். குறிப்பாக தென்னை விவசாயத்தில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தென்னை சார்ந்த தொழில்களும் அங்கு களை கட்டுகிறது. அந்த தொகுதியில் 5 முறை தி.மு.க.வை சேர்ந்த இ.பெரியசாமி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து 3 தடவை வெற்றி பெற்று இ.பெரியசாமி ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். தற்போதைய எம்.எல்.ஏ.வான இவர், வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அந்த தொகுதியில் களம் இறங்கியுள்ளார். தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக பதவி வகித்த இவர், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இதுகுறித்து இ.பெரியசாமி எம்.எல்.ஏ. கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சி காலத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மறுமலர்ச்சி பெற்றது என்றால் அது மிகையல்ல. ஆனால் கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அந்த தொகுதியை ஆளுங்கட்சியினர் கண்டுகொள்ளவில்லை. ஆத்தூர் தொகுதி, தி.மு.க.வின் கோட்டை ஆகும். இங்கு வேறு கட்சியினருக்கு இடம் கிடையாது. இதில் மக்களும் உறுதியாக உள்ளனர்.
என்னை 5 தடவை, எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்த தொகுதி மக்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். என்னால் முயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்து வருகிறேன். தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களுக்கு சேவை செய்வது எனது வாடிக்கை ஆகும். அ.தி.மு.க. ஆட்சியில் செய்ய முடியாத பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்திருக்கிறேன்.
கன்னிவாடியில் நிலவிய கடும் வறட்சியை போக்கும் வகையில், தி.மு.க. ஆட்சி காலத்தில் கடந்த 1974-75-ம் ஆண்டில் கன்னிவாடி மலை அடிவாரத்தில் நாயோடையின் குறுக்கே கசிவுநீர் குட்டை அமைக்கப்பட்டது. இதன் மூலம் மலை அடிவாரத்தில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழித்தது.
தி.மு.க. ஆட்சி காலத்தில், என்னுடைய முயற்சியால் நாயோடையின் குறுக்கே ரூ.350 கோடியில் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 500 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் உட்பகுதியில் மண் திட்டுகள் உள்ளன. இந்த அணையை ஆழப்படுத்த வருகிற தி.மு.க. ஆட்சிகாலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆரம்பகாலத்தில் கன்னிவாடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. தெருவுக்கு தெரு உள்ள கிணறுகளில் கிடைத்த தண்ணீரை பிடித்து குடிநீராக மக்கள் பயன்படுத்தி வந்தனர். கிணறுகளில் உள்ள தண்ணீர், கோடைக்காலத்தில் வற்றி விடும். இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லல்பட்டனர்.
இதைக்கருத்தில் கொண்டு தி.மு.க. ஆட்சிகாலத்தில் நாயோடை அணையின் அருகே 2 ராட்சத கிணறுகள் வெட்டப்பட்டன. அதில் இருந்து கிடைத்த தண்ணீர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு தெருக்குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. அதன்பிறகும் தண்ணீர் தட்டுப்பாடு தீரவில்லை.
இதனால் என்னுடைய சொந்த செலவில் கன்னிவாடி பேரூராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதன்பிறகு தி.மு.க. ஆட்சி காலத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட தோணிமலை தனி வருவாய் கிராமம் ஆகும். இங்கு 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலைக்கிராமத்தில் சாலை வசதி கிடையாது. இதனால் அக்கிராம மக்கள் அல்லல்பட்டனர். பன்றிமலை பிரிவில் இருந்து 7 கிலோமீட்டர் தூரம் தோணிமலைக்கு நடந்து சென்றனர்.
மேலும் கன்னிவாடி நாயோடை அணை பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்துக்கு செங்குத்தான மலையில் ஏறி அந்த கிராமத்துக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதைக்கருத்தில் கொண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் பன்றிமலை பிரிவில் இருந்து தோணிமலைக்கு தார்சாலை அமைக்கப்பட்டது. மேலும் மலைக்கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், தோணிமலை கிராம மக்களுக்கு கிடைக்க தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட மலைப்பாதையை அ.தி.மு.க. அரசு சீரமைக்கவில்லை. இதனால் அந்த மலைப்பாதையை பயன்படுத்த முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கரடு, முரடாக காட்சி அளிக்கும் மலைப்பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. குடிநீர், சாலை, சுகாதாரம் பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. அரசு பொதுமக்களின் குறைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஆத்தூர் தொகுதியில் கிடப்பில் போடப்பட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
கன்னிவாடி வழியாக வந்து செல்லும் அனைத்து பஸ்களும் அங்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். கன்னிவாடியில் அரசு பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். மக்களது எதிர்பார்ப்பின்படி, தமிழகம் விடியல் பெற மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். அப்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இவ்வாறு இ.பெரியசாமி எம்.எல்.ஏ. பேசினார்.
Related Tags :
Next Story