மண்மங்கலம் தாலுகாவில் கிளை நீதிமன்றம், ஏழை மக்களுக்காக இலவச சட்ட உதவி முகாம் ஏற்படுத்தப்படும் - தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி வாக்குறுதி


மண்மங்கலம் தாலுகாவில் கிளை நீதிமன்றம், ஏழை மக்களுக்காக இலவச  சட்ட உதவி முகாம் ஏற்படுத்தப்படும் - தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி வாக்குறுதி
x
தினத்தந்தி 31 March 2021 3:30 PM IST (Updated: 31 March 2021 3:30 PM IST)
t-max-icont-min-icon

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச சட்ட உதவி முகாமும், மண்மங்கலம் தாலுகாவில் கிளை நீதிமன்றமும் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார்.

கரூர்,

கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி கரூர் மேற்கு நகரத்திற்கு உட்பட்ட வையாபுரி நகர், ராயனூர், திருமாநிலையூர், தாந்தோன்றிமலை மற்றும் வடக்கு நகரத்திற்கு உட்பட்ட கலைஞர் சாலை, தில்லை நகர், சின்ன குளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக நடந்து சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், பூக்களை தூவியும், ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசியதாவது:-
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திறன்மிகு வழக்கறிஞர்களை கொண்டு இலவச சட்ட உதவி முகாம் நடத்தப்படும். மண்மங்கலம் தாலுகாவில் கிளை நீதிமன்றம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கரூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் வை-பை வசதி ஏற்படுத்தப்படும். கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்களின் சுவர்களில், மக்களின் மனதில் நல்ல சிந்தனைகளை தூண்டக்கூடிய அழகிய ஓவியங்கள் வரையப்படும். கரூர் சட்டமன்ற தொகுதியில் இயங்கிவரும் கல் குவாரிகளுக்கு கனிமவளத்துறை அனுமதி பெறும் முறை எளிமைப் படுத்தப்படும். கோரை உற்பத்தியாளர்கள் நலம் காக்க அரசு கோரை கொள்முதல் நிலையம் அமைத்து, குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோரையை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story