கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 1½ லட்சம் ரெம்டெசிவிர் ஊசி மருந்து வாங்குகிறது மாநகராட்சி
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளை வாங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிவேகமாக அதிகரித்து வருகிறது. மராட்டியத்தில் எப்போதும் இல்லாத வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
இதேபோல் மும்பையில் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. எனவே மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
இதையடுத்து இந்த இக்கட்டான சூழ்நிலையை சரிசெய்யவும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் அதிகப்படியான ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் வெண்டிலேட்டர்களை வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதேபோல கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்க மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி சுரேஷ் ககானி கூறியதாவது:-
பெரிய தொழில்துறை மற்றும் நிறுவனங்களின் மையமாக விளங்கும் மும்பை நகரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது.
கொரோனா பாதிப்பு உறுதியானவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளோம்.
இதன்மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் மருந்து பற்றாக்குறையை தவிர்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story