கிருதுமால் நதி கால்வாயில் கப்பி மீன்களை விட கோரிக்கை


கிருதுமால் நதி கால்வாயில்  கப்பி மீன்களை விட கோரிக்கை
x
தினத்தந்தி 31 March 2021 6:33 PM IST (Updated: 31 March 2021 6:33 PM IST)
t-max-icont-min-icon

மதுரை நகரில் கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த கிருதுமால் நதி கால்வாயில் கப்பி மீன் குஞ்சுகளை விட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை,
மதுரை நகரில் கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த கிருதுமால் நதி கால்வாயில் கப்பி மீன் குஞ்சுகளை விட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொசுத் தொல்லை
மதுரையில் கொசு பெருக்கம் என்பது தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்து வருகிறது. கொசுப் பெருக்கத்தை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி நிர்வாகம் கால்வாய்களில் கிருமி நாசினி மருந்துகளை தெளித்தும், தெருக்களில் புகை அடித்தும் வருகிறது. இருப்பினும் கொசுக்களின் பெருக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கிறது.
 கொசுக்களின் பெருக்கத்தால் டெங்கு உள்பட பல்வேறு பாதிப்புகள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. இந்த நிலையில், கொசுக்களை கட்டுப்படுத்த அவற்றின் பிறப்பிடமான கிருதுமால் நதி வாய்க்கால் உள்ளிட்ட நீர் நிலைகளில் கப்பி மீன்களை விட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கப்பி மீன்கள்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, "மஸ்குட்டோ பிஷ் என்று கூறப்படும் கப்பி மீன்கள் கொசுக்களின் முட்டை லார்வாக்களை உண்ணக் கூடியவை. கொசுக்கள்  முட்டைகளை பெரும்பாலும் நீர் இருக்கும் இடங்களில் தான் விடுகின்றன.
இந்த நிலையில் மதுரையில் தண்ணீர் செல்லும் இடங்களில் எல்லாம் கப்பி மீன் குஞ்சுகளை விட்டால் கொசு முட்டைகளின் லார்வாக்கள் வளர முடியாது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் இந்த வகை மீன்களை மதுரையில் இருக்கும் நீர் நிலைகளில் விட வேண்டும்"என்றார்.
வறட்சியால் பாதிப்பு
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மாநகராட்சி சார்பில் கிருதுமால் நதியில் தெளிந்த நீர் இருக்கும் பகுதிகளை கண்டறிந்து அந்த இடங்களில் எல்லாம் ஏற்கனவே கப்பி மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக, மேலப்பொன்னகரம், பை-பாஸ் சாலை, ெரயில்வே காலனி, சிந்தாமணி வாய்க்கால் போன்ற தெளிந்த நீர் தேங்கும் இடங்களில் கப்பி மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் கவனித்தால் கப்பி மீன் குஞ்சுகள் இருப்பதை காணலாம்.
 பொதுவாக, வெயில் காலங்களில் நீர் வறண்டு போவதால் மீன் குஞ்சுகளின் எண்ணிக்கை குறைந்து போவது இயல்பானது. இதனால், கொசுக்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. வெயிலின் தாக்கம் குறையும் போது இந்த மீன் குஞ்சுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இது தவிர, தேர்தல் பரபரப்பு குறைந்த உடன் இந்த மீன் குஞ்சுகளை அதிக அளவில் வளர்த்து கால்வாயில் விடும் திட்டம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story