கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் தான் 6 கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன - தொண்டாமுத்தூரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரசாரம்
கோவை மாவட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் தான் 6 கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரசாரத்தின் போது தெரிவித்து உள்ளார்.
கோவை,
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வேடப்பட்டி, கலிக்கநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி, வீதியாக நடந்து சென்று பிரசாரம் செய்தார்.
அப்போது அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி அவர் பேசியதாவது:-
கோவை மாவட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் தான் 6 கல்லூரிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. என்னுடைய முயற்சியால் இந்த கல்லூரிகள் கோவைக்கு கிடைத்தன. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள ஏழை மாணவர்களின் உயர் கல்வி நனவாகி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் பொய்யான வாக்குகளை அளித்து ஒரு எம்.பி. வெற்றி பெற்று சென்றார். ஆனால் அதன்பின்னர் அவரை இந்த தொகுதி பக்கமே பார்க்க முடியவில்லை. கெரோனா காலத்தில் கூட உங்களை வந்து பார்க்கவில்லை.
ஆனால் நான் அப்படி இல்லை. ஊரடங்கு என்று அறிவித்ததும் சென்னையில் இருந்து புறப்பட்டு கோவை வந்து இங்குள்ள மக்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி, முட்டை உள்ளிட்ட பொருட்களை கொடுத்தோம். உணவுக்கு கஷ்டப்பட்டவர்களுக்கு சாப்பாடு சமைத்து கொடுத்தோம்.
மு.க.ஸ்டாலினுக்கு என்னை நினைக்காமல் ஒருநாளும் இருக்க முடியாது. ஜெயலலிதா மறைந்த பின்னர் அ.தி.மு.க. ஆட்சியை கலைத்து விட்டு குறுக்கு வழியில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் நினைத்தார். அதனை நானும், தங்கமணியும் சேர்ந்து தடுத்து நிறுத்தினோம். அதனால்தான் என் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் கூறிவருகிறார்.
இந்த தொகுதியில் வேட்பாளர்களே கிடைக்காத மாதிரி வெளியூரில் இருந்து ஒரு வேட்பாளரை இறக்கி உள்ளனர். அவர் தேர்தல் வரைதான் இங்கிருந்து பேசுவார். அதன்பின்னர் காங்கயம் பக்கம் போய் விடுவார். எனவே மக்கள் நலனில் அக்கறை கொண்ட அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின் போது என்.கே.செல்வதுரை, என்.எஸ்.கருப்புசாமி, ஜி.கே. விஜயகுமார், டி.எ.சந்திரசேகர், டி.பி.வேலுசாமி, தென்கரை சக்திவேல், ராஜா என்ற ராமமூர்த்தி, மதுமதி விஜயகுமார், டி.சி.பிரதீப், ஜெயபால், கே.கே.கதிவரவன், நாச்சிமுத்து, சங்கர், சுரேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story