முதியோர், சர்க்கரை நோயாளிகளுக்கு வீடுகளில் சென்று சிகிச்சை அளிக்கப்படும் - விளவங்கோடு வேட்பாளர் சாமுவேல் ஜார்ஜ் வாக்குறுதி
விளவங்கோடு தொகுதியில் முதியோர், சர்க்கரை நோயாளிகளுக்கு வீடுகளில் சென்று சிகிச்சை அளிக்கப்படும் என வேட்பாளர் சாமுவேல் ஜார்ஜ் தேர்தல் பிரசாரம் செய்தார்.
களியக்காவிளை,
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக டாக்டர். சாமுவேல் ஜார்ஜ் கலையரசர் போட்டியிடுகிறார். இவர் மலையோர கிராமங்களான பத்துகாணி, ஆறுகாணி, நெட்டா, களியல், கடையாலுமூடு, மாங்கோடு, தேவிகோடு, புலியூர்சாலை, மஞ்சாலுமூடு, முழுக்கோடு போன்ற பகுதிகளில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சர்க்கரை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏராளமான முதியவர்கள் மருத்துவமனைகளுக்கு சென்று மருந்து வாங்க முடியாமல் வீடுகளில் தவிக்கிறார்கள்.
அவர்களுக்கு உதவும் விதத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலம் நேரடியாக வீடுகளுக்கு சென்று சிகிச்சை மற்றும் மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்வேன்.
மலையோர பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கால்நடை மருத்துவமனைகள் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு அதிக மானியம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு கிரிக்கெட் மட்டை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story