ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் - கன்னியாகுமரியில் தளவாய்சுந்தரம் பிரசாரம்


ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் - கன்னியாகுமரியில் தளவாய்சுந்தரம் பிரசாரம்
x
தினத்தந்தி 1 April 2021 12:00 AM IST (Updated: 31 March 2021 9:07 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் பொருட்கள் உங்கள் வீடு தேடி வர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய்சுந்தரம் பிரசாரம் செய்தார்.

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் தளவாய்சுந்தரம் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். அவர் நேற்று காலை கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் உள்ள மாசான மூர்த்தி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் ஒற்றையால்விளை, சின்னமுட்டம், கன்னியாகுமரி சர்ச்ரோடு, லூர்துமாதா தெரு, ஜோசப் தெரு, ராஜசங்கீத தெரு, வாவத்துறை உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

கன்னியாகுமரி, ஒற்றையால் பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டு நின்று தளவாய் சுந்தரத்துக்கு வரவேற்பு அளித்தனர்.
அப்போது, பெண்கள் மத்தியில் தரையில் அமர்ந்து குறைகளை கேட்டபடி அவர் பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. பெண்களின் சமூக மேம்பாட்டிற்காக அ.தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. குறிப்பாக பெண்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவச மிக்சி, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் போன்ற பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி உள்ளது.

இந்த அரசு 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும்  1,500 ரூபாயுடன் ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும். 

இந்த பகுதியில் உள்ள பெண்கள் சாலை வசதி குறித்து என்னிடம் புகார் அளித்தனர். அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உங்களுடைய குறைகள் நிவர்த்தி செய்யப்படும். அதேபோல் ஒற்றையால்விளை பகுதிக்கு அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து கூடுதலாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். 
ரேஷன் பொருட்கள் வாங்க பெண்கள் ரேஷன் கடைக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வந்து சேரும். எனவே இந்த அரசு தொடர நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சர் பச்சைமால், மாநில அ.தி.மு.க. இலக்கிய அணி இணை செயலாளர் கவிஞர் சதாசிவம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் அழகேசன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெஸீம், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் அரி ஜெயராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story