கை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பு: கிள்ளியூர் தொகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் வசதி செய்யப்படும் - தேர்தல் பிரசாரத்தில் ராஜேஷ்குமார் உறுதி


கை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பு: கிள்ளியூர் தொகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் வசதி செய்யப்படும் - தேர்தல் பிரசாரத்தில் ராஜேஷ்குமார் உறுதி
x
தினத்தந்தி 1 April 2021 12:00 AM IST (Updated: 31 March 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

கிள்ளியூர் தொகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் புதிய வழித்தடத்தில் பஸ் வசதி செய்து தரப்படும் என காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் தேர்தல் பிரசாரம் செய்தார்.

கருங்கல், 

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று நிந்திரவிளை சந்திப்பில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அப்போது கடைகளில் இருந்த வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தார்.
பின்னர் பாலாமடம், சமத்துவபுரம், கலிங்கராஜபுரம், மாம்பழஞ்சி, தெருமுக்கு, காஞ்சாம்புறம், மாங்குழி, நித்திரவிளை குருசடி, நம்பாளி, கிராத்தூர், வெங்குளங்கரை, மஞ்சதோப்பு, சிலுவைபுரம், கண்ணனாகம், கச்சேரி நடை, காக்கவிளை, மேடவிளாகம், வெங்குளங்கரை போன்ற பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

வேட்பாளர் ராஜேஷ்குமார் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

கிள்ளியூர் தொகுதியில் எனது முயற்சியால் பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல சாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு பெற்று உடனடியாக சீரமைக்கும் நிலையில் உள்ளது. அந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும். மேலும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து வெள்ளை ஈ ஒழிப்பு நடவடிக்கை குழு அமைக்கப்படும். 

பொதுமக்களின் வசதிக்கேற்ப 1000 குடும்ப அட்டைகளுக்கு மேலுள்ள ரேஷன் கடைகளில் உள்ள ரேஷன் கார்டுகளை பிரித்து தேவைப்படும் இடங்களில் கூடுதல் ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மக்கள் எளிதாக சென்று வருவதற்கு வசதியாக புதிய வழித்தடங்களில் பஸ் வசதிகள் செய்யப்படும். இதனால், ஏழை மக்கள் மிகவும் பயனடைவார்கள். குடிநீர் வசதிகள் எங்கெல்லாம் இல்லையோ அந்த இடங்களில் உடனடியாக குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தவும், வேலைவாய்ப்புகள் பெருகிடவும் நீங்கள் அனைவரும் எனக்கு ைக சின்னத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி  வேட்பாளர் விஜய் வசந்துக்கு கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின் போது காங்கிரஸ் வட்டார தலைவர், மாவட்ட நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள், காங்கிரஸ் செயல்வீரர்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் உடனிருந்தனர். 

Next Story