கறிக்கோழி விலை தொடர்ந்து உயர்வு - உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி


கறிக்கோழி விலை தொடர்ந்து உயர்வு - உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 31 March 2021 10:06 PM IST (Updated: 31 March 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

கறிக்கோழி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சுல்தான்பேட்டை,

தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. 

கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த விலையானது கறிக்கோழி நுகர்வு ஏற்றம் மற்றும் இறக்கத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது.
தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு ரூ.73 முதல் ரூ.75 வரை செலவாகிறது. 

இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி(உயிருடன்) ரூ.96 ஆக இருந்த பண்ணை கொள்முதல் விலை, 28-ந் தேதி ரூ.100 ஆக கூடியது. தற்போது மேலும் ரூ.4 அதிகரித்து ரூ.104 ஆகவும் உயர்ந்து உள்ளது
இந்த தொடர் விலை உயர்வு காரணமாக தமிழக கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

தமிழக  சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தொண்டர்கள், நிர்வாகிகள் சோர்வடையாமல் இருக்க அவர்களுக்கு வேட்பாளர்கள் அல்லது அவரது கட்சியினர் சார்பில் சுட சுட சிக்கன் பிரியாணி, அதனுடன் சிக்கன் 65, கோழிக்கறி குருமா சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு கறிக்கோழிக்கு தொடர்ந்து கிராக்கி ஏற்பட்டு வருவதால், விலை உயர்ந்து வருகிறது. தற்போது கடைகளில் கறிக்கோழி இறைச்சி கிலோ ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story