திண்டிவனம், மயிலம் பகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1½ லட்சம் பறிமுதல்
திண்டிவனம், மயிலம் பகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் குந்தளா தலைமையிலான குழுவினர் கீழ்கூடலூர் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்ததில் அதில் வந்த சென்னை காமராஜபுரத்தை சேர்ந்த முத்துகுட்டி (வயது 60) என்பவர் ரூ.65 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. இந்த பணத்தை தனது சொந்த உபயோகத்திற்காக கொண்டு செல்வதாக அவர் கூறினார்.
இருப்பினும் அதற்கான உரிய ஆவணம் ஏதும் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திண்டிவனம் தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி உஷா முன்னிலையில் திண்டிவனம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
மயிலம்
இதேபோன்று, மயிலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் மகேந்திரன் தலைமையிலான குழுவினர் நேற்று முப்புளி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த விஜயகுமார் (31) என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் ரூ.81 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், இந்த பணத்தை சொந்த உபயோகத்திற்காக விருத்தாசலத்தில் இருந்து செய்யாறுக்கு கொண்டு செல்வதாக அதிகாரிகளிடம் விஜயகுமார் கூறினார்.
இருப்பினும் அதற்கான உரிய ஆவணம் ஏதும் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மயிலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story