விழுப்புரத்தில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது பொதுமக்கள் கடும் அவதி
விழுப்புரத்தில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயிலின் அளவு சதத்தை தொட்ட நிலையில் விழுப்புரம் பகுதியிலும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் அளவு 97 டிகிரி முதல் 99 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது. கடந்த 2 நாட்களாக வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் காலை முதலே நகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மதிய வேளையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி 100 டிகிரியாக பதிவானது.
அனல்காற்று
இதனால் சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். மேலும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடைபிடித்தபடியும், முகத்தில் துணிகளை கட்டிக்கொண்டும், பெண்கள் துப்பட்டா மற்றும் புடவையால் தலையில் போர்த்தியபடியும் சென்றதை காண முடிந்தது.
மேலும் சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலான பொதுமக்கள் மதிய வேளையில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதன் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை வாங்க வருபவர்களின் கூட்டமும் குறைவாகவே இருந்தது.
பொதுமக்கள் அவதி
இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் சாலையோரங்களில் கரும்புச்சாறு, நுங்கு, பழச்சாறு, தர்பூசணி, வெள்ளரிப்பழங்களை விற்பனை செய்ய புதிது, புதிதாக கடைகள் முளைத்துள்ளன. அந்த கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் தற்போது வாட்டி வதைத்து வருவதால் வெயிலின் தாக்கத்தை தணிக்க முடியாமல் பொதுமக்கள் பலரும் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story