கோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
கோத்தகிரியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி கடை வீதியில் பிரசித்தி பெற்ற, பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பூ குண்டம் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.
திருவிழாவின் முக்கிய நாளான நேற்று தேர்த் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு அபிஷேக பூஜையும், 12 மணிக்கு அலங்கார பூஜையும் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு பக்தர்கள் திருத்தேர் வடம் இழுக்க, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருந்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் காம்பாய் கடை, பஸ் நிலையம், மாரியம்மன் கோவில், கடைவீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) வரை அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜையும், 3-ந் தேதி மதியம் 1 மணிக்கு அக்னி கம்பம் அனுப்புதல், 4-ந் தேதி மாலை 6 மணிக்கு அம்மனை ரோஸ் காட்டேஜில் உள்ள ஆற்றங்கரையில் வழி அனுப்புதல் நடைபெறுகிறது. 5-ந் தேதி மஞ்சள் நீராடல் மற்றும் மறு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story