இறந்தவர்கள் பெயரில் தபால் ஓட்டுப்போட விண்ணப்பித்தது எப்படி
இறந்தவர்கள் பெயரில் தபால் ஓட்டுப்போட விண்ணப்பித்தது எப்படி.
கோவை,
கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 80 ஆயிரம் பேரில் 8 ஆயிரத்து 459 பேர் தபால் ஓட்டு போட விருப்பம் தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 27-ந் தேதி முதல் கோவை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் வாக்குகள் போட்டு வருகிறார்கள்.
இதற்காக தேர்தல் பிரிவு அதிகாரி, நுண் பார்வையாளர், போலீசார் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் குழுவாக சென்று தபால் வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் நேற்று வரை சுமார் 90 சதவீதம் பேர் தபால் வாக்குகள் பதிவு செய்துள்ளனர்.
தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடர்ந்து வருகிறது. சிலரது வீடுகளுக்கு 2 முறை சென்ற போதும் அவர்கள் இல்லாததால் மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சிலருக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அவர்கள் வாக்களிக்க முடியவில்லை.
இந்த நிலையில் இறந்தவர்களின் பட்டியலில் உள்ள சிலரது பெயர்களிலும் தபால் வாக்குகளுக்கு விண்ணப்பித்திருந்தது தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் தபால் வாக்குகளை சேகரித்து வரும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் சில வீடுகளுக்கு சென்ற போது தபால் வாக்குகள் விண்ணப்பித்தவர்கள் இறந்திருந்தது தெரியவந்துள்ளது. ஒரு தொகுதிக்கு அதிகபட்சமாக 5 பேர் வரை இறந்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், தபால் வாக்குகள் கேட்டு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள். அவர்கள் தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்கும் போது நன்றாக இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் ஒரு மாத காலத்தில் இறந்திருக்கலாம்.
இந்த நிலையில் இறந்தவர்களின் பெயரில் தபால் ஓட்டுப்போட விண்ணப்பித்தது எப்படி? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story