திண்டிவனத்தில் பரபரப்பு - ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர் வீட்டில் நகை திருட்டு - மருத்துவமனையில் இறந்த மனைவியின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்தவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி
திண்டிவனத்தில் ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர் வீட்டில் நகை திருட்டு போனது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பாரதிதாசன் நகர் நடேசன் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 59). நகராட்சி ஓய்வு பெற்ற ஊழியர். இவரது மனைவி தங்கம். உடல்நலம் பாதிப்பு காரணமாக, தங்கம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுதிமக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதன் காரணமாக, புகழேந்தி, அவரது மகன் கண்ணன் ஆகியோர் மருத்துவமனையில் இருந்து பார்த்து வந்தனர். இதனால் கடந்த சில தினங்களாக அவர்கள் வீட்டுக்கு வரவில்லை.
திருட்டு
இந்த சூழ்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை பெற்றுக்கொண்டு, திண்டிவனத்தில் அடக்கம் செய்ய வீட்டுக்கு எடுத்து வந்துள்ளனர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், பீரோவை உடைத்து, 3 பவுன் தாலி செயின், 2 பவுன் கம்மல், 4 பித்தளை பாத்திரும், ஒரு பித்தளை அண்டா ஆகியவற்றை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பரபரப்பு
இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story