வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.56 லட்சம் பறிமுதல்
குளித்தலை அருகே வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.56 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
குளித்தலை
வாகன சோதனை
தமிழகம் முழுவதும் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுப்பது மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுவி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள இரும்பூதிபட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
ரூ.56 லட்சம் பறிமுதல்
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த வங்கி ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக கொண்டு வந்திருந்த வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி ரூ.56 லட்சம் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்து உதவி கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலரான ஷேக் அப்துல்ரகுமான் அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வருமானவரித்துறை அலுவலர்கள் இதுதொடர்பாக பணம் கொண்டு வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் போதுமான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.56 லட்சம் குளித்தலை சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story