வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி
ராமநாதபுரத்தில் கலெக்டர் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டது
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் கலெக்டர் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை பெட்டியில் போட்டனர்.
பயிற்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 6-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவிற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவிற்காக 1,647 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சாவடி மையங்களில் மட்டும் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று 7,905 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு இதுவரை 2 கட்ட தேர்தல் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக 3-ம் கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் 7,905 வாக்குவச்சாவடி அலுவலர்கள் மற்றும் 2,472 காவல் துறை அலுவலர்களில் இதுவரை மொத்தம் 9,311 நபர்கள் தபால் வாக்கு கோரி விண்ணப்பித்துள்ளனர்.
தபால் வாக்குகள்
இவர்களுக்கு பதிவு தபால் மூலமாக வாக்கு சீட்டுகள் அனுப்பும் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. தேர்தல் பயிற்சி முடிந்ததும் அந்தந்த பயிற்சி மையங்களிலேயே அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை நேரடியாக செலுத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேநேரத்தில் தபால் வாக்குகளின் ரகசிய தன்மையை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் 5-ந்தேதி மீண்டும் தேர்தல் பயிற்சி நடத்தப்பட உள்ளது. அன்றைய தினமும் தேர்தல் அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்தலாம். மேலும், மே 1-ந்தேதி வரை அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை கட்டணமின்றி தபால் நிலையம் மூலமாகவும் அனுப்பலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
அப்போது, சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராமநாதபுரம் தொகுதி சப்-கலெக்டர் சுகபுத்ரா, பரமக்குடி தொகுதி ஆர்.டி.ஓ. தங்கவேல், திருவாடானை தொகுதி மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story