வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் திருச்சியில் அனல் பறக்கும் பிரசாரத்தை முடக்கிய சுட்டெரிக்கும் வெயில் சாலையோர வியாபாரம் பாதிப்பு


வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் திருச்சியில் அனல் பறக்கும் பிரசாரத்தை முடக்கிய சுட்டெரிக்கும் வெயில் சாலையோர வியாபாரம் பாதிப்பு
x
தினத்தந்தி 1 April 2021 1:49 AM IST (Updated: 1 April 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் பிரசாரத்தை முடக்கும் வகையில் வெயில் சுட்டெரிக்கிறது.

திருச்சி, 
தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் பிரசாரத்தை முடக்கும் வகையில் வெயில் சுட்டெரிக்கிறது.

அனல் பறக்கும் பிரசாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட சட்ட சபை தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் சில சுயேச்சைகளும் தங்கள் பங்கிற்கு தொண்டர்கள் இல்லாவிட்டாலும் தனிநபராக சென்று வாக்காளர்களை சந்தித்து வருகிறார்கள். தேர்தல் களம் சூடுபிடித்ததுபோல, தற்போது தட்பவெப்பமும் சூடுபிடித்துள்ளது.

பிரசாரம் முடக்கம்

கொளுத்தும் வெயிலால் திருச்சி உள்ளிட்ட தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை காலை 7 மணிக்கு தொடங்கி காலை 11 மணிக்குள் சில வேட்பாளர்கள் முடித்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். பின்னர், மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்கி இரவு 10 மணிவரை மேற்கொள்கிறார்கள். இடைபட்ட 6 மணி நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேட்பாளர்களும், உடன் செல்லும் நிர்வாகிகள், தொண்டர்கள் திணறி வருகிறார்கள். அந்த வேளையில் ஓய்வெடுத்து கொள்கிறார்கள். இதனால், பகல் வேளையில் வேட்பாளர்களுடன் பிரசாரத்திற்கு செல்லும் தொண்டர்கள் சொற்ப அளவிலேயே இருந்ததை காணமுடிந்தது. ஆனாலும் சில அரசியல் கட்சி வேட்பாளர்கள் வெயிலில் இருந்து தப்பித்து கொள்ளும் வகையில் தங்களின் பிரசார வாகனத்தின் மேல் சாமியானா பந்தல் அமைத்தும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

பொதுமக்களும் முடக்கம்

மேலும் பகலில் அடிக்கும் வெயிலுக்கு பொதுமக்களும் முடங்கிபோய் உள்ளனர். அன்றாடம் வேலைக்கு செல்பவர்களை தவிர, வீட்டில் இருப்பவர்களும் வெளியில் தலைகாட்டுவது இல்லை. வசதி படைத்தவர்களாக இருந்தால் வீட்டில் பகல் வேளையிலேயே ஏ.சி.போட்டு முடங்கி விடும் நிலைக்கு அவர்களை வெயில் பாடாய் படுத்தி வருகிறது. 

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2 முறை வெயில் அளவு அதிக பட்சமாக 104.18 டிகிரியை தொட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 105.62 டிகிரி வெயில் அடித்தது. நேற்று அது 105.8 டிகிரியாக உயர்ந்தது.

கடந்த 2016-ம் ஆண்டுக்கு பின்னர், தற்போதுதான் திருச்சியில் அதிக பட்ச வெயில் அளவு பதிவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் கொடுமையில் இருந்து தப்பித்து ஆசுவாசப்படுத்தி கொள்ள, பொதுமக்கள் மோர், சர்பத், பதநீர், இளநீர், குளிர்பானங்கள், இளநீர், கம்பங்கூழ் போன்றவற்றை அருந்தியும், தர்பூசணி, முலாம் பழம், போன்ற பழங்களை சாப்பிட்டு உடல் சூட்டை தணித்து வருகிறார்கள்.

கருப்பு கண்ணாடிக்கு மாறினர்

வெயில் கொடுமையில் இருந்து தற்காத்து கொள்ள இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள், முகத்தை முழுமையாக துணியால் மறைத்து கட்டியபடி செல்வதை காணமுடிகிறது. கண்களில் கருப்பு கண்ணாடியும் அணிந்து செல்கிறார்கள். பாதசாரியாக செல்லும் பெண்கள் கையில் குடையுடனும், சிலர் துப்பாட்டாவை தலையில் போட்டபடியும், சேலை அணிந்த பெண்கள் முந்தானையை தலையில் போட்டபடியும் செல்வதை காணமுடிந்தது. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அனல்காற்றால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக, சாலைகளில் பகல் வேளையில் வழக்கத்தை விட குறைவான வாகனங்களையே காணமுடிகிறது. பஸ்சில் பயணிப்போரும் அனல் காற்றுக்கு தப்பவில்லை. இதேபோல் பகல்நேரத்தில் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளும் அனல்காற்றுக்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

வியாபாரிகள் பாதிப்பு

திருச்சி காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் மார்க்கெட் சாலையோர தரைக்கடை வியாபாரிகள் வெயிலின் கொடுமைக்கு பெரிய அளவிலான குடையை நிழலுக்காக வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். சிலர் தலையில் முக்காடு போட்டுக்கொண்டும், சாக்குப்பையால் வேயப்பட்ட பந்தல் அமைந்தும் வியாபாரம் செய்தனர். மேலும் பனை ஓலை மற்றும் அட்டையால் ஆன சிறிய விசிறிகளையும் வைத்து கொண்டே வியாபாரத்தை கவனித்து வருகிறார்கள்.

சுமைதூக்கும் தொழிலாளர்கள் வியர்வையால் நனைந்தபோதும் சுட்டெரிக்கும் வெயிலிலும் வழக்கம்போல தங்கள் பணிகளை செய்தனர். வெயில் கொடுமை ஒரு பக்கம். இன்னொரு பக்கம் கொரோனா தாக்கம் என மக்கள் மீண்டும் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படுமோ? என்ற அச்சமும் நிலவி வருகிறது.

Next Story