வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி தொடக்கம்


வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 1 April 2021 2:27 AM IST (Updated: 1 April 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருந்தும் பணி தொடங்கியது.

சிவகாசி,
சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருந்தும் பணி தொடங்கியது. 
வாக்கு எந்திரங்கள் 
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் ஆணையம் சார்பில் 368 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு சாவடிகளில் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் 440 வாக்கு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை அனுப்பி வைத்தது. 
மேலும் எந்த வேட்பாளருக்கு வாக்கு அளிக்கப் பட்டுள்ளது என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள எந்திரம் 479 வந்துள்ளது. 
பொருத்தும் பணி 
இந்த எந்திரங்கள் அனைத்தும் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் உள்ள எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. 
இந்த நிலையில் நேற்று காலை வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குசீட்டு பொருத்தும் பணி தொடங்கியது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த பணி இரவு வரை தொடர்ந்து நடைபெற்றது. சிவகாசி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், சிவகாசி சப்-கலெக்டருமான தினேஷ்குமார் மேற்பார்வையில் இந்தபணிகள் நடைபெற்றது.
சிவகாசி தாலுகாவில் பணியாற்றி வரும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 150 அலுவலர்கள் இதில் பணியாற்றினர். 
 சிவகாசி தாசில்தார் சுப்பிரமணியம், தனி தாசில்தார் லோகநாதன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் அகஸ்தீஸ்வரன் உள்பட பலர் மேற்பார்வை பணியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் 
ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் சின்னங்கள் பொருத்தும் பணி வி.பி.எம்.எம். கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் தலைமையில் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
திருச்சுழி 
திருச்சுழி தொகுதியில் நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை திருச்சுழி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சுரேந்திர பிரசாத் சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருச்சுழிதொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசன், உதவி தேர்தல் அலுவலர்கள் சிவகுமார், சந்திரசேகரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Next Story