ஈரோட்டில் சுட்டெரிக்கும் வெயில் 105 டிகிரி வெப்பம் வாட்டியது


ஈரோட்டில் சுட்டெரிக்கும் வெயில் 105 டிகிரி வெப்பம் வாட்டியது
x
தினத்தந்தி 1 April 2021 2:40 AM IST (Updated: 1 April 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் நேற்று 105 டிகிரி சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டியது.

ஈரோட்டில் நேற்று 105 டிகிரி சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டியது.
105 டிகிரி வெயில்
தமிழ்நாட்டில் தேர்தல் களம் அனல் பறக்கும் பிரசாரத்தால் சூடு பிடித்து உள்ளது. அதே நேரம் இயற்கையும் கோடை வெயிலால் மக்களை வாட்டி வதைக்கிறது. பிப்ரவரி மாதம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் வெயிலின் தாக்கம் தொடங்கி விட்டது. கடந்த மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.
90 டிகிரி செல்சியஸ் முதல் 98 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை வெயிலின் தாக்கம் இருந்தது. நேற்று முன்தினம் வெயிலின் அளவு 100 டிகிரியை கடந்தது. நேற்று வெயிலின் உக்கிரம் கடுமையாக உயர்ந்தது. நேற்று ஈரோட்டில் அதிக பட்ச வெயில் 105 டிகிரியாகவும், குறைந்த பட்சம் 81 டிகிரியாகவும் இருந்தது.
குளிர்பானங்கள்
பகல் நேரத்தில் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு அனல் கொதித்தது. காற்று அனலாக வீசியது. வெந்நீரை முகத்தில் ஊற்றியது போல அனல் காற்று அடித்தது. வெயிலின் கொடுமையால் பொதுமக்கள் குளிர்பான கடைகளுக்கு படை எடுத்தனர். கரும்பு சாறு, கம்பங்கூழ், ஜிகர்தண்டா, நுங்கு, பதநீர், பழரசங்கள்,      சர்பத், குளிர் சோடா விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் குவிந்தனர். நீரா பானம் குடிக்கவும் பலர் ஆர்வமாக சென்றனர்.
எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்ப முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். வீடுகள், அலுவலகங்கள், கடைகளின் உள்ளே உட்கார முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டியது. வீட்டுச்சுவர்கள் அடுப்பு சுவர் போன்று சுடும் அளவுக்கு வெப்பம் தகித்தது. ஏ.சி. எந்திரம் இருந்தால் மட்டுமே வெப்பத்தை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. மின்விசிறி காற்றும் வெப்பக்காற்றையே வீசியது.
இந்த நிலை நீடிக்காமல் விரைவில் மழை பெய்ய வேண்டும். இல்லை என்றால் கத்தரி வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story