பெருந்துறை, சத்தி, அறச்சலூர் பகுதியில் 4 பேரிடம் ரூ.9 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை


பெருந்துறை, சத்தி, அறச்சலூர் பகுதியில் 4 பேரிடம் ரூ.9 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை
x
தினத்தந்தி 1 April 2021 3:06 AM IST (Updated: 1 April 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை, சத்தியமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் 4 பேரிடம் இருந்து ரூ.9 லட்சத்தை பறிமுதல் செய்தார்கள்.

பெருந்துறை, சத்தியமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் 4 பேரிடம் இருந்து ரூ.9 லட்சத்தை பறிமுதல் செய்தார்கள்.
வாகன சோதனை
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஏ.சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் மற்றும் போலீசார் அந்த வழியாக சென்ற கோவையில் இருந்து மைசூரு செல்லும் கர்நாடகா அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் அன்னூரை சேர்ந்த தாமோதரன் என்பவர் சாம்ராஜ்நகருக்கு தானியங்கள் வாங்க உரிய ஆவணமின்றி ரூ.7லட்சத்து 18 ஆயிரத்தை எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு, சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் உள்ள பவானிசாகர் தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர் மற்றும் உதவி அலுவலர் ரவிசங்கர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெருந்துறை சுங்கச்சாவடி
இதேபோல் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், முத்துசாமி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து பெருந்துறையை நோக்கி ஒரு சரக்கு வேன் வந்துகொண்டு இருந்தது. 
அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியதில் ரூ.56 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் சரக்கு வேனை ஓட்டி வந்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூரைச்சேர்ந்த செல்வம் என்பதும், கேரளாவில் நெல் அறுக்கும் எந்திரத்தை இறக்கி வைத்துவிட்டு ஊருக்கு சென்றதும் தெரியவந்தது. ஆனால் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு, பெருந்துறை தேர்தல் அலுவலர் இலாகிஜான் வசம் ஒப்படைக்கப்பட்டது.
ரூ.92 ஆயிரம்... 
இதேபோல் விஜயமங்கலத்தில் இருந்து பெருந்துறையை நோக்கி ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது. அதை  நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்த பவானி ஆலாம்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன் (25) என்பரிடம் ரூ.92 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதனால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து அதை பெருந்துறை தேர்தல் அதிகாரி இலாகிஜானிடம் ஒப்படைத்தார்கள்.
அறச்சலூர் அருகே...
அறச்சலூர் அருகே நொய்யல் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது காங்கேயத்தில் இருந்து சரக்கு ஆட்டோவில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த ஜான் (30) என்பவர் வந்தார். அவரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் 66 ஆயிரத்து 820 ரூபாய் இருந்தது. அவர் வாசனை திரவிய வியாபாரி  என்றும், வியாபாரம் முடிந்து அந்த பணத்தை கொண்டுவருவதாகவும் கூறினார். ஆனால் அதற்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. இதனால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, அதை மொடக்குறிச்சி தாசில்தார் சங்கர் கணேசிடம் ஒப்படைத்தார்கள். 

Related Tags :
Next Story