பதவி ஏற்ற 100 நாட்களுக்குள் ஆவடி தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன் பாண்டியராஜன் உறுதி
பதவி ஏற்ற 100 நாட்களுக்குள் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று பாண்டியராஜன் உறுதி அளித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. சார்பில் ஆவடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.பாண்டியராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் நேற்று காமராஜர் நகர் பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றிபெறச் செய்யுமாறு அங்கு கூடியிருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அப்போது அங்கு திரண்டு நின்று கொண்டிருந்த பொதுமக்கள், ‘எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்' என்றும் ‘இரட்டை சிலை சின்னத்தில் வாக்களித்து உங்களை அமோக வெற்றி பெறச் செய்வோம்' என்று கோஷமிட்டனர். இதையடுத்து அந்த தொகுதியில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு சென்று கே.பாண்டியராஜன் வாக்கு சேகரித்தார். அவருடன் ஏராளமான அ.தி.மு.க. கூட்டணி நிர்வாகிகளும் தொண்டர்களும் உடன் சென்றனர்.
பாதாள சாக்கடை திட்டம்
முன்னதாக காமராஜர் நகர் பகுதியில் பாண்டியராஜன் பேசியதாவது:-
எதிர்க்கட்சியான தி.மு.க. ஆவடி பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை கொண்டு வரமுடியாது என்று சவால் விட்டனர். ஏன் கொண்டு வர முடியாது? அதை எங்களால் கொண்டுவர முடியும் என்று நாங்கள் கூறினோம். அதை தற்போது நிறைவேற்றி உள்ளோம். பட்டாபிராமில் தொழில்நுட்ப பூங்கா அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல் இங்கு பாதாள சாக்கடை திட்டத்தை எங்களால் நிறைவேற்ற முடியாது என்று தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். அந்த பொய் பிரசாரத்தை முறியடிக்க, நீங்கள் என்னை இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். நான் பதவி ஏற்ற 100 நாட்களுக்குள் பாதாள சாக்கடை திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றி முடிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story