முல்லை பெரியாறு திட்டத்தால் 24 மணி நேரமும் குடிநீர் அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்


முல்லை பெரியாறு  திட்டத்தால் 24 மணி நேரமும் குடிநீர் அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்
x
தினத்தந்தி 1 April 2021 8:41 AM IST (Updated: 1 April 2021 8:41 AM IST)
t-max-icont-min-icon

பொன்மேனி, முனியாண்டிபுரத்திற்கு உட்பட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது பொதுமக்கள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

மதுரை,

மதுரை மேற்கு சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.  நேற்று அவர் பொன்மேனி, முனியாண்டிபுரத்திற்கு உட்பட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது பொதுமக்கள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பல இடங்களில் பெண்கள் திரண்டு நின்று எங்கள் ஓட்டு உங்களுக்கே, இரட்டை இலைக்கே என்று உற்சாக ஆரவாரம் எழுப்பினர். 

பிரசாரத்தின் போது அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது மக்கள் அடிப்படை வசதியின்றி தவித்தனர். ஒருநாளைக்கு 20 மணி நேர மின் வெட்டு இருந்தது. அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் மக்களின் பிரச்சினைகள் ஒவ்வொன்றும் தீர்த்து வைக்கப்பட்டன. மின்வெட்டு என்பது இல்லாமல் போனது. அதே போல் அடிப்படை வசதிகளிலும் தன்னிறைவு பெற்று இருக்கிறது. மதுரையில் மக்கள் குடிநீருக்கு அல்லல்பட்டு கொண்டு இருந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, இன்னும் 50 ஆண்டு காலம் மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்க கூடாது என்பதற்காக முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் ரூ.1,200 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. அதற்கான பணிகள் தொடங்கி விட்டது. இன்னும் ஒரு ஆண்டில் பணிகள் முடிந்து விடும். அதன்பின் மதுரை மாநகரம் முழுவதும் 24 மணி நேர தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும். அதே போல் மாநகரில் விடுப்பட்ட பகுதிகளில் எல்லாம் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு வருகிறது. விரிவாக்க பகுதிகளிலும் தற்போது பாதாள சாக்கடை இணைப்புக்கான பணிகள் நடந்து வருகிறது. அதே போல் தெரு விளக்கு வசதி, சாலை வசதி மற்றும் சுகாதாரம் என அனைத்து அடிப்படை வசதியிலும் மதுரை தன்னிகர் பெற்றுள்ளது. அதே போல் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மதுரை மக்களுக்கு முழுமையாக கிடைத்துள்ளது. 

தமிழகத்தில் அமைதி, வளம், வளர்ச்சி தொடர வேண்டுமென்றால் அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும். எனவே மக்கள் அனைவரும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தங்களது வாக்குகளை செலுத்தி ஆதரவு தர வேண்டும். ஒரு அமைச்சராக மதுரை மேற்கு தொகுதிக்கு மட்டுமல்ல, நமது மதுரைக்கும் எண்ணற்ற திட்டங்களை நான் செயல்படுத்தி இருக்கிறேன். உங்கள் வீட்டு பிள்ளையாக,  எங்களின் சாதனைகளை உங்களுக்கு பட்டியலிட்டு உரிமையோடு வாக்கு கேட்கிறோம். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு உங்களது பொன்னான வாக்குகளை செலுத்த வேண்டும். எதிர்கட்சிகள் அனைத்தும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story