ஆத்துப்பட்டி குடகனாற்றில் புதிய பாலம் கட்டப்படும் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. வாக்குறுதி


ஆத்துப்பட்டி குடகனாற்றில் புதிய பாலம் கட்டப்படும் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. வாக்குறுதி
x
தினத்தந்தி 1 April 2021 10:14 AM IST (Updated: 1 April 2021 10:14 AM IST)
t-max-icont-min-icon

தாடிக்கொம்புவை அடுத்த ஆத்துப்பட்டி குடகனாற்றின் குறுக்காக புதிய பாலம் கட்டித் தரப்படும் என்று முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.

தாடிக்கொம்பு, 

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்று அகரம், தாடிக்கொம்பு பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார். முன்னதாக அவர் செல்லும் இடமெல்லாம் அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் பொதுமக்களிடையே பேசியதாவது:-

மழைக்காலங்களில் குடகனாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் ஆத்துப்பட்டி-விட்டல்நாயக்கன்பட்டி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கிராமங்கள் தீவுபோல் மாறிவிடுகின்றன. இதைத்தடுக்க ஆத்துப்பட்டி குடகனாற்றில் புதிய பாலம் கட்டி தரப்படும். மேலும் சிக்கையகவுண்டன்புதூர் சந்தானவர்த்தினி ஆற்றின் குறுக்கேயும் பாலம் அமைக்கப்படும். இங்குள்ள பல கிராமங்களில் நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

தாடிக்கொம்பு-கோட்டூர்ஆவாரம்பட்டி இடையே வெள்ளைக்காரன்மேடு வழியே புதிதாக ரூ.5 கோடியில் இணைப்பு சாலை அமைக்கப்படும். அதேபோல் அகரம், தாடிக்கொம்பு பேரூர் பகுதிகளில் சீரமைக்கப்படாமல் உள்ள சாலை புதிதாக அமைக்கப்படும்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான முதியோர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுவிட்டது. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முதியோர் அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

கிராம பகுதிகளில் மட்டும் செயல்பட்டு வரும் தேசிய ஊரக வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிக்கும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அதன் கூலியும் ரூ.300 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தாடிக்கொம்பு, அகரம் பேரூராட்சி பகுதிகளில் நானே வந்து திட்டத்தை தொடங்கி வைப்பேன்.

தமிழக அரசு துறையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தும் அரசு பணியில் இல்லாத குடும்பங்களை சேர்ந்த தகுதியான இளைஞர்கள் - இளம்பெண்களுக்கு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணி ஒதுக்கீட்டில் எவ்வித லஞ்சத்துக்கும் இடம் கொடுக்காமல் நேர்மையான முறையில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே அவர் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அனைத்து கிராமங்களுக்கும்   காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். 

பிரசாரத்தில் திண்டுக்கல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சந்திரசேகரன், காங்கிரஸ் வட்டார தலைவர் தனபால், அகரம், தாடிக்கொம்பு பேரூர் தி.மு.க. செயலாளர்கள் ஜெயபால், நாகப்பன், அவைத்தலைவர்கள் ரத்தினசாமி, சுப்பையா, மாவட்ட பிரதிநிதிகள் செல்வராஜ், தாமஸ், இன்னாசி, ராஜு, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் நந்தகோபால், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் இளங்கோ, தி.மு.க. பிரமுகர்கள் அம்பைரவி, சின்னத்தம்பி மற்றும் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

Next Story