கடமலை-மயிலை ஒன்றியத்தில் மலைக்கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா அ.தி.மு.க வேட்பாளர் ஏ. லோகிராஜன் உறுதி
ஆண்டிப்பட்டி தொகுதி கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள மலைக்கிராம மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.லோகிராஜன் உறுதி அளித்தார்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.லோகிராஜன் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று கடமலை-மயிலை ஒன்றியம் கோரையூத்து, கீழபூசணூத்து, சிங்கராஜபுரம், தும்மக்குண்டு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். முன்னதாக அவரை கிராம பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மேற்கொண்ட பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பெருபான்மையுடன் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கும். அதன்பின்னர் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். நமது தொகுதி மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளிமலை, இந்திராநகர், அரசரடி உள்ளிட்ட மலைக்கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றும் வனத்துறையினரின் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்படும்.
மேற்கண்ட மலைக்கிராமங்களில் அரசு தொடக்கப்பள்ளி, சோலார் விளக்குகள் அமைத்தல், பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். வாலிப்பாறை, காந்திகிராமம், சீலமுத்தையாபுரம், தண்டியக்குளம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் வசிக்கும் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்படும். மூலவைகை ஆறு மற்றும் ஓடைகளில் புதிய தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏழை தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் ஊரக வேலை திட்ட பணி நாட்கள் 100-ல் இருந்த 150 நாட்களாக உயர்த்தப்படும். இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும். ஆகவே வருகிற தேர்தலில் என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்து ஆண்டிபட்டி என்றுமே அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் அ.தி.மு.க. தேனி மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், கடமலை-மயிலை தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.தர்மராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story