கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவேன் - அ.தி.மு.க. வேட்பாளர் முத்துக்குமார் வாக்குறுதி
கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவேன் என அ.தி.மு.க. வேட்பாளர் முத்துக்குமார் வாக்குறுதி அளித்தார்.
கரூர்,
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முத்துக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் நேற்று பள்ளபாளையம், செல்லாண்டிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் பெரியவர்களின் பாதம் தொட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பெண்களுக்காக வருடத்திற்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் வாசிங்மெஷின் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன் இந்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார். பெண்களுக்கான அரசாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணராயபுரம் தொகுதியில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். சாலைகள், உயர்மின் கோபுரங்கள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவேன். உங்கள் வீட்டுப்பிள்ளையாக இருந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்ய எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story