பெண்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் - திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வேண்டுகோள்
பெண்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வேண்டுகோள் விடுத்தார்.
திருச்சி,
திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை அவர், சுப்பையா தெரு, உசேன் நகர், காஜாபேட்டை, சுப்பிரமணியபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசும்போது,
“தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை, டவுன் பஸ்களில் இலவச பயணம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி ஆகியவை நிறைவேற்ற தி.மு.க. ஆட்சி வரவேண்டும். அதற்காக நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி, திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் வீடு, வீடாக சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் போது, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட தலைவர் ராயல்ராஜா, பகுதி செயலாளர்கள் மண்டி சேகர், பாலமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story