கே.கே. நகர், கே.சாத்தனூர் பகுதியில் திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தீவிர பிரசாரம்


கே.கே. நகர், கே.சாத்தனூர் பகுதியில் திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தீவிர பிரசாரம்
x
தினத்தந்தி 1 April 2021 4:53 PM IST (Updated: 1 April 2021 4:53 PM IST)
t-max-icont-min-icon

கே.கே. நகர், கே.சாத்தனூர் பகுதியில் திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

மலைக்கோட்டை,

திருச்சி கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 38, 38 ஏ வார்டுகளுக்கு உட்பட்ட மங்கம்மாள் சாலை, எல்.ஐ.சி. காலனி, உடையான்பட்டி, கே.சாத்தனூர், வடுகப்பட்டி, கவிபாரதிநகர், எம்.ஜி.ஆர். நகர், இ.பி.காலனி, கே.கே.நகர், தென்றல்நகர், சேஷாயிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி, வீதியாகவும், வீடு, வீடாகவும் சென்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 

அ.தி.மு.க. ஆட்சியில் திருச்சி மாநகரத்தில் பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் முதல்-அமைச்சர் பழனிசாமி நேற்று திருச்சியிலேயே பட்டியலிட்டுள்ளார். முதல்-அமைச்சரின் திருச்சி பிரசாரத்துக்குப்பின் அ.தி.மு.க.வுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள, குடும்பத்துக்கு மாதம் ரூ.1,500, வருடத்திற்கு 6 விலையில்லா கியாஸ் சிலிண்டர், சோலார் அடுப்பு, இலவச கேபிள் இணைப்பு என்பது உள்ளிட்ட குடும்பங்களின் நிதி மற்றும் பணிச்சுமையை குறைக்கும் திட்டங்கள் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. முதல்-அமைச்சர் பழனிசாமி கூறினால், நிச்சயம் அதை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. 

எனவே, தொகுதிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளோடு, இந்த வாக்குறுதிகளும் திட்டங்களாக மாற, அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும். அதற்கு இந்த தொகுதியில் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து அமைச்சர், இந்த பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஸ்கூட்டரில் சென்றும், ஒரு சில இடங்களில் பிரசார வேனில் நின்றபடியும் ஓட்டு சேகரித்தார். 

பிரசாரத்தின் போது, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன், பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி, தொழிற்சங்கம் ராஜேந்திரன், பீடி, தீப்பெட்டி பிரிவு மாநில செயலாளர் சகாபுதீன், வட்டச்செயலாளர்கள் சதீஷ், ராஜசேகரன், சரவணன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், வெல்லமண்டி ஜவகர்லால் நேரு உள்ளிட்ட அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story