தேனியில் கோடை வெயிலின் தாக்கத்தை தணித்த மழை சூறைக்காற்றில் கோவில் திருவிழாவுக்கு கட்டிய சாரம் சரிந்தது


தேனியில் கோடை வெயிலின் தாக்கத்தை தணித்த மழை சூறைக்காற்றில் கோவில் திருவிழாவுக்கு கட்டிய சாரம் சரிந்தது
x
தினத்தந்தி 1 April 2021 1:36 PM GMT (Updated: 1 April 2021 1:36 PM GMT)

தேனியில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் நேற்று பலத்த மழை பெய்தது. அப்போது சூறைக்காற்று வீசியதில் கோவில் திருவிழாவுக்கு கட்டிய சாரம் சரிந்தது.

தேனி:
தேனி நகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. 100 டிகிரியை தாண்டி வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர தயங்கும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. நேற்று பகலில் 100.4 டிகிரி வெயில் அடித்தது.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. இது சில நிமிடங்களில் பலத்த மழையாக உருவெடுத்து சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால், தேனி நகரில் பிரதான சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் மழைநீரில் குப்பைகள் அடித்து வரப்பட்டு ஆங்காங்கே குவிந்து கிடந்தன.
சாரம் சரிந்தது
தேனி பழைய டி.வி.எஸ். சாலையின் குறுக்கே கோவில் திருவிழாவுக்காக கம்புகளால் சாரம் கட்டி, வளைவு அமைக்கப்பட்டு இருந்தது. அதில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தன. இதனிடையே, மழையுடன் சூறைக்காற்று வீசியதில் இந்த சாரம் சரிந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால், மின்தடை ஏற்பட்டது. 
சாரம் சரிந்து விழுந்த போது அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்களும், தேனி போலீசாரும் அங்கு விரைந்து வந்து கம்புகளை அகற்றி மீட்பு பணிகளை செய்தனர். இதையடுத்து மீண்டும் மின்சார வினியோகம் சீரானது.

கோடை வெயிலால் மக்கள் பரிதவித்து வந்த நிலையில், வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழை மண்ணையும், மக்களின் மனதையும் குளிர வைத்தது.Next Story