சுசீந்திரம் கோவில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் - காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் வாக்குறுதி


சுசீந்திரம் கோவில் கும்பாபிஷேகம்  நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் - காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் வாக்குறுதி
x
தினத்தந்தி 2 April 2021 12:00 AM IST (Updated: 1 April 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் கோவில் கும்பாபிஷேகம் நடந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் வாக்குறுதி அளித்துள்ளார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஜயகுமார் என்ற விஜய்வசந்த் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சமுதாய தலைவர்கள், ஊர் தலைவர்கள், மீனவ பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து தனக்கு கை சின்னத்தில் ஆதரவு தருமாறு கோரி வருகிறார். மேலும் கடைக்காரர்கள், வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய்வசந்த் நேற்று கன்னியாகுமரி சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆஸ்டினுடன் சேர்ந்து பிரசாரம் செய்தார். அவர் சுசீந்திரத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் கரையான்குழி, பள்ளவிளை, நல்லூர், தேரூர், புதுக்கிராமம், குலசேகரன்புதூர், ஆதலவிளை, சங்கரன்குழி, கோட்டவிளை, இரவிபுதூர், மருங்கூர், குமாரபுரம் தோப்பூர், ராஜாவூர், கோழிக்கோட்டு பொத்தை, ராமனாதிச்சன்புதூர், காமராஜர்நகர், மயிலாடி, புன்னார்குளம், அழகப்பபுரம், அஞ்சுகிராமம், கனகப்பபுரம், மேட்டு குடியிருப்பு, புத்தளம், தெங்கம்புதூர், செம்பொன்கரை, புத்தன்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக விஜய்வசந்த் சுசீந்திரத்தில் பேசும்போது கூறியதாவது:-

வருகிற 6-ந் தேதி மிக முக்கியமான நாளாகும். அன்றைய தினம் அனைவரும் வாக்குசாவடிக்கு சென்று மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அதே போல கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் ஆஸ்டினுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். என் தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக நான் தேர்தல் களத்தில் உள்ளேன்.
சுசீந்திரம் பகுதியில் கலையரங்கம் கட்டி தருவேன் என்று என் தந்தை கூறினார். இந்த தருணத்தில் அதை நான் செய்வேன் என்று உறுதியாக கூறுகிறேன். 

மேலும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் கும்பாபிஷேகம் பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. எனவே சுசீந்திரம் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த நானும், ஆஸ்டினும் சேர்ந்து நடவடிக்கை எடுப்போம். தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தான் வரப்போகிறது. எனவே குமரி மாவட்டத்தில் வளர்ச்சிகளை கொண்டு வர எங்களுக்கு வாக்கு அளித்து மிகப்பெரிய வெற்றியை தாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து மாலையில் மேல மணக்குடி மற்றும் கீழ மணக்குடி பகுதிகளில் வீடு, வீடாக சென்று விஜய்வசந்த் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் மீனவ மக்களை சந்தித்து, மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்குகளை அளிக்கும்படி கேட்டு கொண்டார்.

பிரசாரத்தின் போது அவர் பேசுகையில் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றக்கூடிய தேர்தல் இது. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்துக்கு எந்த மக்கள் நலத்திட்டங்களும் வரவில்லை. பா.ஜனதாவின் மக்கள் விரோத சட்டங்களுக்கு அ.தி.மு.க. துணை போனதோடு நம்முடைய வாழ்வாதாரங்களையும் கெடுத்து கொண்டு இருக்கிறார்கள். வளர்ச்சிகள் எல்லாவற்றையும் தடுத்து நிறுத்தி உள்ளனர். எனவே அதற்கு முடிவுகட்ட மாற்றம் தேவைப்படுகிறது. அதற்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்குகளை அளித்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள். 

தமிழகம் எழுச்சி பெற வேண்டும். குமரி மாவட்டமும், மக்களும் எழுச்சி அடைய வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் என் தந்தை வசந்தகுமாரை பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அவரது குரல் மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்தது.

குமரி மாவட்டத்துக்கும், மக்களுக்கும் வளர்ச்சியை கொண்டு வர பல திட்டங்களை என் தந்தை தீட்டினார். பல அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து புதிய புதிய திட்டங்களுக்கு வழி வகுத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக கொரோனா தாக்கி என் தந்தை உயிரிழந்தார். என் தந்தை விட்டு சென்ற பணியை தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள். 

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் பெருவாரியாக வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்யுங்கள். நான் வெற்றி பெற்றால் பேச்சிப்பாறை அணையை தூர்வாரி சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுப்பேன். குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்துவதற்கு பாடுபடுவேன். ரப்பருக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க முயற்சிகள் எடுப்பேன். குமரி மாவட்டத்தில் கிடைக்கும் இயற்கை ரப்பர் மூலம் ரப்பர் உதிரி பாகங்கள் மற்றும் ரப்பர் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்த ரப்பர் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். மொத்தத்தில் மக்கள் விரும்பும் திட்டங்களை கொண்டு வர பாடுபடுவேன்.

குமரி மாவட்டத்தில் என் தந்தை விட்டு சென்ற திட்டங்களை நிறைவேற்ற என்னை எம்.பி.யாக தேர்ந்து எடுக்க வேண்டும். ஒரு தொகுதியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர எம்.பி.யாக இருந்தாலே போதும். தற்போது விலைவாசி ஏற்றத்தால் மக்களின் வாழ்க்கை தள்ளாடுகிறது. மேலும் வேலை இல்லா திண்டாட்டத்தில் குமரி மாவட்ட இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. எனவே இளைஞர்களுக்கு தேவையான வேலைவாய்ப்புகளை கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story