4 தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 96 நுண்பார்வையாளர்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தலை கண்காணிக்க 96 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தலை கண்காணிக்க 96 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
பதற்றமான வாக்குச்சாவடி
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் பார்வையாளர்கள் ராமநாதபுரம், முதுகுளத்தூர் தொகுதி சொராப் பாபு, பரமக்குடி தொகுதி விசோப் கென்யே, திருவாடானை தொகுதி அனுரக் வர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பயிற்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மொத்தம் 1,647 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 80 இடங்களில் அமைந்துள்ள 228 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு, வெப் கேமரா கண்காணிப்பு, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. குறிப்பாக, பொதுத்துறை வங்கி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் 96 பேர் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாதிரி வாக்குப்பதிவு
தேர்தல் நடவடிக்கைகளில் நுண் பார்வையாளர்களின் பணி மிகவும் முக்கியமானதாகும். வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் காலை 5.30 மணிக்கே வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி உறுதி செய்திட வேண்டும். தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு நேர்மையாகவும், எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்திடும் வகையில் நுண்பார்வையாளர்களின் பணி அமைந்திட வேண்டும்.
தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பொது பார்வையாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து உரிய கால இடைவெளியில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வாக்குச்சாவடி மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால், சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேஷியஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நஜிமுன்னிசா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திக், மின்னணு வாக்குப்பதிவு எந்திர பொறுப்பு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி மகளிர் திட்ட அலுவலர் கிருஷ்ணகுமார், தாசில்தார் கார்த்திகேயன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story