நெருக்கடியான, பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வசதி


நெருக்கடியான, பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வசதி
x
தினத்தந்தி 1 April 2021 11:17 PM IST (Updated: 1 April 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

நெருக்கடியான, பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நெருக்கடியான மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ஆ.அண்ணாதுரை தலைமை தாங்கினார். தேர்தல் பொது பார்வையாளர்கள் வினோத்குமார், முகம்மது கைசர் அப்துல்ஹக், பட்டேல், ரஞ்சிதா, காவல்துறை பொது பார்வையாளர் பண்டோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை பேசுகையில், மாவட்டத்தில் உள்ள 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நெருக்கடியான, பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் உரிய முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் அச்சத்தை போக்கிடும் வகையில் துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது.

முழு ஒத்துழைப்பு

மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நபர்களை காவல்துறையினர் கண்டறிந்து தேர்தல் நடைபெறும் நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்தை விதிகளின்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நல்ல முறையிலும், அமைதியான முறையிலும் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story