பஸ்சில் முக கவசம் அணியாமல் பயணித்தவர்களுக்கு அபராதம்


பஸ்சில் முக கவசம் அணியாமல் பயணித்தவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 1 April 2021 11:26 PM IST (Updated: 1 April 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

பஸ்சில் முக கவசம் அணியாமல் பயணித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

ராமநாதபுரம்
கொரோனா தாக்கம் அனைத்து பகுதிகளிலும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை கடைப்பிடிக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று ராமநாதபுரம் நகரின் முக்கிய வீதிகளில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நடந்து சென்று முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார். பஸ்களில் ஏறி முககவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் டிரைவர் கண்டக்டர்களை முககவசம் அணிந்த பின்னரே பஸ்களில் ஏற அனுமதிக்க வேண்டும் என கண்டித்தார். இதன்பின்னர் அவர் கூறும்போது, கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். எனவே, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சோதனை நடத்தி அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் விதிப்பது நோக்கமல்ல. அதன்மூலம் முக கவசம் அணியவேண்டும் என்பதே அரசின் நோக்கம். ராமநாதபுரம் மாவட்டத்தில் முக கவசம் அணியாத 19 ஆயிரத்து 269 பேரிடம் ரூ.40 லட்சத்து 28 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மட்டும் ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார். கலெக்டருடன் நகரசபை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.

Next Story