கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 8 இடங்களில் கார்களில் கொண்டு வந்த ரூ.11.45 லட்சம் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் ஆவணங்கள் இன்றி கார்களில் கொண்டு வந்த ரூ.11.45 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று 3 இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது கார்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.3 லட்சத்து 21 ஆயிரத்து 90 அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல ஓசூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.74 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனர். தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தக்கட்டி சோதனைச்சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.96 ஆயிரத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
பர்கூர்
இதேபோன்று பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அச்சமங்கலம் கூட்ரோடு பகுதியில் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்து 800 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். அவர் பெங்களூரு இனோவா நகரை சேர்ந்த முனீர் ( 42) என்பதும், கிரானைட் கற்கள் வாங்க பணம் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் பாக்கியலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
ஊத்தங்கரை
இதேபோன்று ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோவில் பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது ரூ.2 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் காரில் ரூ.94 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, தேர்தல் அலுவலர் சேது ராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 இடங்களில் ரூ.11 லட்சத்து 45 ஆயிரத்து 390-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story