திண்டுக்கல்லில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை; மரங்கள் சாய்ந்து விழுந்ததில் 2 கார்கள் சேதம்


திண்டுக்கல்லில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை; மரங்கள் சாய்ந்து விழுந்ததில் 2 கார்கள் சேதம்
x
தினத்தந்தி 2 April 2021 1:08 AM IST (Updated: 2 April 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் சுட்டெரித்த வெயிலை விரட்டியடிக்கும் வகையில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மரங்கள் சாய்ந்து விழுந்ததில் 2 கார்கள் சேதமடைந்தன.

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் சுட்டெரித்த வெயிலை விரட்டியடிக்கும் வகையில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மரங்கள் சாய்ந்து விழுந்ததில் 2 கார்கள் சேதமடைந்தன.
சுட்டெரித்த வெயில்
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில தினங்களாக சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டியது. தண்ணீரில் குளித்த சில நிமிடங்களிலேயே வியர்வை குளியல் போட வேண்டிய நிலை இருந்தது.
பகல், இரவு என எந்த வேளையில் மின்விசிறி சுழன்றாலும் அனல் காற்றையே கக்கியது. வெயிலின் கோரப்பிடியில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வதற்காக குளிர்பான கடைகளை நாடி சென்றனர். மேலும் இளநீர், பழங்கள், பழச்சாறு விற்பனை சூடுபிடித்தது. 
மதியநேரத்தில் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். வருணபகவான் கருணை காட்ட மாட்டாரா? என்ற ஏக்கத்தில் பொதுமக்கள் காத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று காலையில் இருந்தே சூரிய பகவான் தனது கோரத்தாண்டவத்தை தொடங்கி விட்டார். பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.
ஆலங்கட்டி மழை
இந்தநிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாலை நேரத்தில் கார்மேக கூட்டம் வானத்தை ஆக்கிரமித்து கொண்டன. சிறிதுநேரத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்தது.
மேகத்தை தொட்ட காற்று, மழையாக கொட்ட தொடங்கியது. திண்டுக்கல்லில் ஆலங்கட்டி மழை பெய்தது. சாலையில் சிறிய கற்கள் போல் விழுந்து சிதறிய ஆலங்கட்டிகளை சிறுவர்கள் கைகளில் எடுத்து பார்த்து மகிழ்ந்தனர். 
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால் திண்டுக்கல் நாகல்நகர், பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில், வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.
கார்கள் சேதம்
இதற்கிடையே காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள மரங்கள் மண்டியிட்டன. ஏ.எம்.சி. சாலையோரத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்தது. இதில் கார் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். 
இதேபோல் ரவுண்டுரோட்டில் மரம் சாய்ந்து விழுந்ததில் மற்றொரு கார் சேதமடைந்தது. இதே சாலையின் குறுக்காக மற்றொரு மரம் சாய்ந்து விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின்சாரம் துண்டிப்பு
திண்டுக்கல் புறநகர் பகுதியில், ஆங்காங்கே மின்சார வயர்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரவு வரை கிராமங்கள் இருளில் மூழ்கின. திண்டுக்கல் மாலப்பட்டி சாலையில், தனியார் பட்டறை அருகே டிரான்ஸ்பார்மர் மீது ராட்சத மரம் சாய்ந்து விழுந்தது. 
இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர்.
காற்றில் பறந்த மேற்கூரை
திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் பகுதியில் இருந்த ஒரு கடையின் மேற்கூரை காற்றில் பறந்து அப்பகுதியில் இருந்த மின்கம்பம் மீது விழுந்தது. இதில் கம்பத்துடன் இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பி அறுந்து கீழே விழுந்தது. 
மழை பெய்ய தொடங்கியதுமே, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. மின்கம்பி அறுந்து விழுந்தது குறித்து தகவலறிந்த மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
சின்னாளப்பட்டியில் மழை
இதேபோல் ஒட்டன்சத்திரம், நத்தம், நிலக்கோட்டை பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. சின்னாளபட்டியில் நேற்று மாலை 4.30 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. 
சுமார் அரை மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதன் காரணமாக நகரின் முக்கிய வீதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெள்ளோடு, சிறுமலை அடிவார பகுதி ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது.
சுட்டெரிக்கும் சூரியனை விரட்டியடிக்கும் வகையில், வெப்பத்தை போக்கும் வகையில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் நேற்று பெய்த கோடைமழையினால், வானம் பார்த்த பூமியாக உள்ள நிலங்களில் பயிரிட்ட பயிர்கள் வளம் பெற வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

Next Story