கடலூர் மாவட்டத்தில் மேலும் 63 ரவுடிகள் கைது போலீசார் நடவடிக்கை
போலீசார் நடவடிக்கை
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் மாவட்டம் முழுவதும் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் மாவட்டத்தில் தேர்தலை அமைதியாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இன்றியும் நடத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள ரவுடிகள், அவரது கூட்டாளிகள், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, திட்டக்குடி, சிதம்பரம் உள்பட 7 உட்கோட்டங்களிலும் ரவுடிகள் பட்டியலை போலீசார் தயாரித்ததில், 573 ரவுடிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் முக்கிய ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். இது வரை மாவட்டத்தில் 238 ரவுடிகளை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட 7 உட்கோட்டங்களிலும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மேலும் 63 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story