தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வியாழன் சிறப்பு திருப்பலி


தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வியாழன் சிறப்பு திருப்பலி
x
தினத்தந்தி 2 April 2021 1:58 AM IST (Updated: 2 April 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வியாழன் சிறப்பு திருப்பலி நேற்று நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக பாதம் கழுவும் சடங்கு நடைபெறவில்லை.

தஞ்சாவூர்:
தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வியாழன் சிறப்பு திருப்பலி நேற்று நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக பாதம் கழுவும் சடங்கு நடைபெறவில்லை.
கிறிஸ்தவ ஆலயங்கள்
ஏசு நாதர் சிலுவையில் அறைப்பட்டு இறப்பதற்கு முன்னர் தனது சீடர்களுடன் இரவு உணவு அருந்தி சீடர்களின் பாதங்களை கழுவிய நாளை புனித வியாழனாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.
ஏசுநாதர் தனது சீடர்களின் பாதங்களை கழுவியதன் நினைவாக முதியவர்களின் பாதங்களை கழுவி முத்தம் செய்யும் சடங்கு தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று புனித வியாழன் சிறப்பு திருப்பலி  அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடைபெற்றது. ஒரு சில கிறிஸ்தவ ஆலயங்களை தவிர்த்து இதர ஆலயங்களில் கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு கருதி பாதம் கழுவும் சடங்கு இடம் பெற வில்லை.
புனித வியாழன் திருப்பலி 
ஆனால் புனித வியாழனை யொட்டி தஞ்சை திரு இருதய பேராயலத்தில் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி  நடைபெற்றது. அப்போது உலக அமைதிக்காவும், கொரோனா தொற்றில் இருந்து விடுபடவும் சிறப்பு மன்றாட்டு நடைபெற்றது. இதில் இறைமக்கள் முக கவசம் அணிந்து, சமுக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
இதே போல் தஞ்சையில் அடைக்கலமாதா ஆலயம், மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள புனித லூர்துஅன்னை ஆலயம், அண்ணாநகர் செபஸ்தியார் ஆலயம், தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயம், குழந்தை ஏசு ஆலயம் உள்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் புனித வியாழன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை புனிதவெள்ளி திருப்பலி  நடைபெறுகிறது. 
திருக்காட்டுப்பள்ளி 
இதேபோல் பூண்டி மாதா ஆலயத்திலும் புனித வியாழன் சிறப்பு திருப்பலி நடந்தது. அப்போது 12 பேரின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இதில் துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தை ராஜ், உதவி பங்கு தந்தை அருண்சவரி ராஜ, ஆன்மீக தந்தையர் அருளானந்தம், கருணைதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story