ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை மந்தம்
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை மந்தமானது.
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை மந்தமானது.
மாட்டுச்சந்தை
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாட்டுச்சந்தை வாரம்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு, 100 வளர்ப்பு கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை ஆனது.
நேற்று வழக்கமான சந்தை கூடியது. இதற்கு ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. 450 பசு மாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
மாடுகள் விற்பனை மந்தம்
இதில் எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.55 ஆயிரத்துக்கும், பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.
இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, ‘மராட்டியம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் அந்த மாநில வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை. இதேபோல் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதால் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநில வியாபாரிகள் பணம் எடுத்து வருவதில் சிரமம் உள்ளதால் பெரும்பாலான வியாபாரிகள் மாடுகள் வாங்க வரவில்லை. இதன் காரணமாக மாடுகள் விற்பனை மந்தமாக இருந்தது’ என்றனர்.
Related Tags :
Next Story