45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
ஈரோடு மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
முன்கள பணியாளர்கள்
கொரோனா வைரசை கட்டுப்படுத்த கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் முதல் கட்டமாக பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஈரோட்டில் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையம் என 24 மையங்களிலும், 42 தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி
இந்த நிலையில் நேற்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 24 அரசு ஆஸ்பத்திரிகளிலும், 42 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பொதுமக்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முன்னதாக தடுப்பூசி போட வந்தவர்களின் உடல் நிலை பரிசோதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களுக்கு டாக்டர்கள் கொரோனா தடுப்பூசி போட்டனர்.
கட்டணம்
தடுப்பூசி போடப்பட்ட பின்னர் 30 நிமிடங்கள் அவர்கள் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்தனர். இதைத்தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்பதை உறுதி செய்த டாக்டர்கள் அவர்களை வீடுகளுக்கு செல்ல அனுமதித்தனர்.
அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனையில் கட்டணம் பெற்றுக்கொண்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Related Tags :
Next Story