சத்தியமங்கலம், மொடக்குறிச்சியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.9 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
சத்தியமங்கலம், மொடக்குறிச்சியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.9 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சத்தியமங்கலம், மொடக்குறிச்சியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.9 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி சத்தியமங்கலத்தை அடுத்த தொட்டம்பாளையம் ஆற்று பாலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாரதி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது அந்த வேனில் இருந்தவரிடம் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 900-ம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
வியாபாரி
விசாரணையில் அவர், ‘திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த வியாபாரி சஞ்சீவ் என்பதும், காடை கோழி வாங்குவதற்காக கர்நாடக மாநிலம் சென்றதும்,’ தெரியவந்து. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த புஞ்சைபுளியம்பட்டி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுப்பையா தலைமையிலான குழுவினர் அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்த தனலட்சுமி என்பவர் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டனர். மருத்துவ செலவுக்காக பணம் கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தாலும், அதற்குண்டான ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆடுகள் வாங்க...
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடாசலம் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வேனில் பழனியை சேர்ந்த சையது இப்ராகிம் என்பவர் கர்நாடகவுக்கு சென்று ஆடுகள் வாங்குவதற்காக கொண்டு வந்த ரூ.3 லட்சத்து 8 ஆயிரத்து 500-ஐ உரிய ஆவணங்கள் இல்லாதால் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பண்ணாரி சோதனை சாவடியில் நடந்த மற்றொரு வாகன சோதனையில் கோவை மாவட்டம் மணிகாரம்பாளையத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் கர்நாடகாவுக்கு ஆடு வாங்க கொண்டு சென்ற ரூ.68 ஆயிரத்து 700-ஐ உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சூலூரை சேர்ந்த பாபு என்பவர் காரில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஊருக்கு பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக சென்று கொண்டிருந்தார். அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அவர் ரூ.80 ஆயிரம் வைத்திருந்தது கண்டு்பிடிக்கப்பட்டது. ஆனால் பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதனால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, பவானிசாகர் தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சத்தியமங்கலம் பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.7 லட்சத்து 5 ஆயிரத்து 100-ஐ பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி உமாசங்கர் மற்றும் உதவி தேர்தல் அதிகாரி ரவிசங்கர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பறக்கும் படையினர் கருமாண்டாம்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ‘ஈரோடு மோளக்கவுண்டன்பாளையம் பாலதண்டாயுத வீதியை சேர்ந்த மீன் வியாபாரியான ராஜேஷ் நாகப்பட்டினத்துக்கு மீன் வாங்க சென்றதும்,’ தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி சங்கர் கணேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.
சத்தியமங்கலம், மொடக்குறிச்சி பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் மொத்தம் 9 லட்சத்து 15 ஆயிரத்து 100 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story