வேதாரண்யம் கடைவீதிகளில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு


வேதாரண்யம் கடைவீதிகளில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 2 April 2021 4:58 AM IST (Updated: 2 April 2021 4:58 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் கடைவீதிகளில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

வேதாரண்யம்,

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வேதாரண்யம் கீழ வீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு விதி, யானைகட்டி தெரு, மேலத்தெரு, மாரியம்மன் கோவில் தெரு நாகை ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள வர்த்தகர்களை கடை, கடையாக கூட்டணி கட்சியினருடன் சென்று சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வர்த்தகர்கள் அமைச்சருக்கு மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அமைச்சர் ஓ.எஸ். மணியன் வாக்கு சேகரித்து பேசும் போது கூறியதாவது:-

வேதாரண்யத்தில் 65 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் தான் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டம் நடைபெற ஏதுவாக தற்போது நான்கு வீதிகளிலும் ரூ.10 கோடியில் சிமெண்ட் சாலை அமைக்கப்படும்.  கடற்கரையில் மக்களுக்காக பொழுதுபோக்கு பூங்காவும், முதியோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யத்தில் 75 ஆண்டுகளாக முழுமையாக தூர்வாரப்படாத வேதாரண்யம் ஏரியை தூர்வாரப்பட்டு நடைப்பயிற்சி மேடையும்,  நான்கு புறம் சுற்றுச்சுவரும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் சன்னதி கடற்கரை செல்லும் வழியில் மலைபோல் தேங்கி இருந்த குப்பைகளை அகற்றி குப்பை மறுசுழற்சி மையம் ஏற்படுத்தி நாள்தோறும் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. வேதாரண்யத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் மின்மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மேலும் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கமலா அன்பழகன் இல்ல திருமண விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

வாக்கு சேகரிப்பின் போது ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன், சுப்பையன், மாவட்ட கவுன்சிலர் திலீபன், நகரச் செயலாளர் நமச்சிவாயம், நகர துணை செயலாளர் சுரேஷ்பாபு, கோடியக்கரை ஜின்னா அலி, அ.தி.மு.க. பிரமுகர் மாரியப்பன், நகர அவைத்தலைவர் பழனிவேல் மற்றும் ஒன்றிய நகர கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story