16 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த கோழிப்பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது
கோழிப்பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை
கோவை
16 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த கோழிப்பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
நாட்டுக்கோழி பண்ணை
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கருப்பன் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38). இவருடைய தம்பி மகேஷ் (36). இவர்கள் அங்குள்ள சுங்கத்தோட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் நாட்டுக்கோழி வளர்ப்பில் அதிக லாபம் ஈட்டலாம் என்று கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.
அதை நம்பி கோவை மாவட்டம் காரமடை மங்கலகரைபுதூரை சேர்ந்த சீராஜ் (60) என்பவர் பணம் செலுத்தினார். ஆனால் அவர்கள் அறிவித்தது போன்று சீராஜ்க்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை.
இது குறித்து அவர் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் பிரகாஷ், மகேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
10 ஆண்டு சிறை
இதில் அவர்கள் 2 பேரும் 16 பேரிடம் இருந்து ரூ.40 லட்சத்து 56 ஆயிரம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணை கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி மோசடி செய்த பிரகாசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.21 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
நேற்று பிரகாஷ் கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் மாணிக்கராஜ் ஆஜராகி வாதாடினார்.
மேலும் இந்த வழக்கில் மகேஷ் ஆரம்பத்திலிருந்தே விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராக வில்லை. எனவே அவர் மீதான வழக்கை தனியாக எடுத்துக் கொண்டு கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இதனால் அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story