ஊத்தங்கரை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
ஊத்தங்கரை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கல்லாவி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மிட்டப்பள்ளி ஊராட்சி புதுக்காலனி, எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சில தினங்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இதுவரை தண்ணீர் ஏற்றி கிராமமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை. மினி குடிநீர் தொட்டி பழுதடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் இதுவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலை திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிங்காரப்பேட்டை போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி சீராக குடிநீர் வழங்கவும், பழுதடைந்த மினி குடிநீர் தொட்டியை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story