பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணியை வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது
பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணியை வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்து விட்டதாக கருமத்தம்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை
பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணியை வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்து விட்டதாக கருமத்தம்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சூலூர் தொகுதியின் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கொ.ம.தே.க.வை சேர்ந்த பிரீமியர் செல்வத்தை ஆதரித்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:- கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அனைவரையும் நீங்கள் வெற்றி பெற வைத்ததால், பிரதமர் மோடி நம்மீது இன்னும் கோபத்தில்தான் உள்ளார்.
மத்திய பா.ஜனதா அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தங்களிடம் இருந்த பணத்தை மாற்றுவதற்காக வங்கி வாசல்களில் வரிசையில் நின்று பலர் இறந்து போனார்கள். இதை மனதில் வைத்து அவர்களை புறக்கணியுங்கள்.
வீட்டுக்கு அனுப்பும் நேரம்
பிரதமர் மோடி மதுரையில் நட்டு சென்ற எய்ம்ஸ் மருத்துவமனைக்கான செங்கல்லை நான் எடுத்து வந்துள்ளேன். பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அங்கு ஒரு செங்கல் மட்டும் நட்டு வைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் தராத பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணியை வீட்டுக்கு அனுப்புவதற்கான நேரம் தற்போது வந்து விட்டது.
சேப்பாக்கம் தொகுதியில் 5 நாட்கள் மட்டும்தான் பிரசாரத்துக்கு சென்றேன். ஆனால் நான் கண்டிப்பாக வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
ஏனெனில் கருணாநிதி 3 முறை வெற்றி பெற்ற தொகுதி அது. அதற்குப் பின் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வை தமிழகத்திற்குள் கொண்டு வந்து விட்டார்.
தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 14 மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்து கொண்டனர். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
குறுக்கு வழியில் வரவில்லை
கடந்த 7 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த ஒரு வளர்ச்சி பணியும் பா.ஜனதா அரசு செய்யவில்லை. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களை மக்களிடம் தி.மு.க. தொண்டர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
என்னை குறுக்கு வழியில் வந்தவர் என்று பிரதமர் மோடி விமர்சிக்கிறார். நான் குறுக்கு வழியில் வரவில்லை நேரடியாக மக்களை சந்தித்து உயர்ந்து வந்துள்ளேன்.
அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா 32 வயதில் கிரிக்கெட் வாரியத்துக்கு தலைவரானது எப்படி? இவ்வளவு சொத்து வந்தது எப்படி? நாட்டில் நன்றாக உள்ள மாநிலங்களை சிதைத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஒவ்வொரு மாநிலங்களாக குறுக்கு வழியில் கொல்லைப்புறம் வழியாக ஆட்சி அமைத்தது பா.ஜனதா தான்.
ஒண்டிப்புதூர்
எடப்பாடியில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் சிறைக்கு செல்வது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து ஒண்டிபுதூர் சுங்கம் மைதானத்தில் சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் நா.கார்த்திக்கை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசினார். 2 நிமிடங்கள் மட்டுமே பேசிய அவர் 10 மணி ஆனதும், தனது பேச்சை நிறுத்தி விட்டார்.
தேர்தல் விதிமுறைப்படி 10 மணிக்கு பேச்சை நிறுத்தியதாக அங்கிருந்த பொதுமக்களிடம் தெரிவித்தார். பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு கைகொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story