வீட்டு பத்திரத்தை கொடுக்க மறுத்ததால் மாமியார் வெட்டிக்கொலை செய்த மருமகன் கைது
வீட்டு பத்திரத்தை கொடுக்க மறுத்ததால் மாமியார் வெட்டிக்கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார்.
பேரூர்
பேரூர் அருகே குப்பனூரை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி சாந்தாமணி (வயது 58). கூலி தொழிலாளி. இவர், தனது மகள் மோகனப்பிரியா மற்றும் மருமகன் சதாசிவத்துடன் (36) வசித்து வந்தார்.
இந்த நிலையில் மருமகன் சதாசிவம், சாந்தாமணியின் வீட்டின் பத்திரத்தை கொடுக்க வலியுறுத்தி அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று சதாசிவம் மீண்டும் சாந்தாமணியிடம் வீட்டின் பத்திரத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
ஆனால் சாந்தாமணி வீட்டின் பத்திரத்தை கொடுக்க மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதாசிவம், அங்கிருந்த அரிவாளை எடுத்து சாந்தாமணியை தலை, கை, விரல், கழுத்து ஆகியவற்றில் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது.
இதில் சம்பவ இடத்திலேயே சாந்தாமணி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். ஆனால் அவர்களையும், அவர் அரிவாளை காட்டி மிரட்டி உள்ளார்.
பின்னர் வீட்டின் கதவையும் பூட்டிக்கொண்ட அவர் யாராவது அருகே வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் சதாசிவத்தை கைது செய்தனர். பின்னர் சாந்தாமணியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story