மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதியின் மகன் என்ற தகுதி மட்டும் தான் உள்ளது
மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதியின் மகன் என்ற ஒரே ஒரு தகுதி மட்டும் தான் உள்ளது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
திருவண்ணாமலை
மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதியின் மகன் என்ற ஒரே ஒரு தகுதி மட்டும் தான் உள்ளது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
வாக்கு சேகரிப்பு
திருவண்ணாமலை அருகே புதுமல்லவாடியில் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து இன்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இது நமக்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். இந்த ேதர்தலில் இந்த தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பிச்சாண்டி 10 ஆண்டு காலமாக எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவர் இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக ஏதாவது செய்து உள்ளாரா?. கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி என்பது மிகவும் பின்தங்கிய பகுதி. இந்த தொகுதியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அதனால் இந்த முறை செல்வகுமாருக்கு வாக்களியுங்கள். அவர் உங்களையே சுற்றி, சுற்றி வருவார். அவர் தொகுதியின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை கொண்டு வருவார். அதற்கு அன்புமணி ராமதாஸ் உத்தரவாதம் அளிக்கிறேன்.
70 ஆண்டு காலத்திற்கு பிறகு ஒரு விவசாயி தமிழகத்தின் முதல்- அமைச்சராக உள்ளார். அவர் எடப்பாடி பழனிசாமி. அவர் விவசாயி என்பதால் மீண்டும் முதல்- அமைச்சராக வேண்டும். நம்ம அணியில் முதல்- அமைச்சர் வேட்பாளர் விவசாயி, தி.மு.க. அணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் அரசியல் வியாபாரி. நாங்கள் சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்து உள்ளோம். ஆனால் ஸ்டாலின் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், அவரது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அரசியலுக்கு வந்து உள்ளார். தி.மு.க. தலைமையில் மட்டும் அப்படி இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் அப்படி தான் உள்ளது.
கருணாநிதியின் மகன்
என்னை பொறுத்தவரை தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதியின் மகன் என்ற ஒரேஒரு தகுதி மட்டும் தான் உள்ளது. அவர் கருணாநிதியின் மகனாக இல்லையென்றால் தி.மு.க.வின் கிளை செயலாளராக கூட இருந்திருக்கமாட்டார்.
நாங்கள் இந்த கூட்டணியில் சேர்ந்ததற்கு முக்கிய காரணம் சமூகநீதி. சமூக நீதி என்பது என்னவென்றால் பின்தங்கியுள்ள சமுதாயங்களை முன்னேற்ற வேண்டும். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு வன்னீயர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது.
இதைபெற போராடியவர் ராமதாஸ், வழங்கியவர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அனைத்து பின்தங்கிய சமுதாயத்திற்கும் தனித்தனி இடஒதுக்கீடு பெற்று தருவோம். இதுதான் நமது கொள்கை, நோக்கம்.
தற்போது வரும் கருத்து கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்பு. தமிழகத்தில் 6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் 32 ஆயிரம் பேரிடம் மட்டும் கருத்து கணிப்பு எடுக்கப்பட்டு உள்ளது. நமக்கு வந்த கருத்து கணிப்பு எல்லாம் 200 தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும் என்று வந்து உள்ளது.
அதில் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியத்தில் செல்வகுமார் வெற்றி பெற அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்றவை நடைபெறும்.
ஆனால் எடப்பாடி ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியாக உள்ளது. அவர் 4 ஆண்டுகள் ஆட்சி செய்ததில் பல நல்ல திட்டங்களை செய்து உள்ளார். அதனால் அவருக்கு மேலும் 5 ஆண்டு காலம் நிச்சயமாக கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story