ரூ.18 லட்சம் பறிமுதல், அ.தி.மு.க. வேட்பாளர் வி.ராமு மீது வழக்கு
காட்பாடியில் கலெக்டர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.ராமு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காட்பாடி
காட்பாடியில் கலெக்டர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.ராமு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் திடீர் சோதனை
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு இறுதிக்கட்ட பிரசாரம் நடந்து வருகிறது. பணம் மற்றும் பரிசுப் பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கல்புதூர் மெட்டுக்குளம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான உணவகத்தில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதற்காக பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும் பணம் கை மாறுவதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சண்முகசுந்தரம், காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டி மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றனர்.
ரூ 18 லட்சம் பறிமுதல்
அந்த ஓட்டலில் உள்ள ஒரு அறையில் பூத் சிலிப்புகள், அ.தி.மு.க. வேட்பாளர் வேட்பாளர் ராமு படம் மற்றும் அக்கட்சியின் வாக்குறுதிகள் பொறிக்கப்பட்டிருந்த தேர்தல் துண்டுப் பிரசுரங்கள் கட்டுக்கட்டாக இருந்தன. அங்கிருந்த 8 பேர் கவர்களில் பணத்தை பிரித்து போடும் பணியை செய்து கொண்டிருந்தனர்.அவர்களிடமிருந்து ரூ.18 லட்சத்து 41 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
8 பேர் கைது
இந்த சோதனை நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை நீடித்தது. அதைத்தொடர்ந்து காட்பாடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டி தலைமையில் விசாரணை நடந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக உணவகத்தில் இருந்த குடியாத்தம் கல்லூர் கிராமத்தை சேர்ந்த நரேஷ் (வயது 36), நத்தமேடு கிராமத்தை சேர்ந்த மோகன் (30), கே.வி. குப்பத்தை சேர்ந்த ராஜசேகர் (41), பொன்னையை சேர்ந்த கோபிநாதன் (21), சரவணன் (22), நல்பட்டியை சேர்ந்த கணேஷ் (28), எருக்கன்பட்டியை சேர்ந்த மோகன்குமார் (36), வேட்பாளர் ராமுவின் தம்பி சோபன்பாபு (44) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேட்பாளர் மீதும் வழக்கு
இவர்கள் மீது 147, 294(பி), 353, 171 (இ), 506 (1) ஆகிய 5பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காட்பாடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.ராமு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story