தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் ஓட்டுப் போட்டனர்
கோவை மாநகரில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் நேற்று தபால் வாக்குகள் பதிவு செய்தனர்.
கோவை,
கோவை மாநகரில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் ஓட்டு போடுவதற்காக கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டது.
அங்கு, கோவை மாநகரில் தேர்தல் பணியில் ஈடுபடும் 1750 போலீசார் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். காலை 7 மணி முதல் இரவு 7 வரை போலீசார் வாக்களித்தனர்.
இதற்காக அவர்கள் தாங்கள் பணியாற்றும் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அல்லது உயர் அதிகாரிகளிடம் இருந்து சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காட்டி ஓட்டு போட்டனர்.
அந்த மையத்தில் வாக்காளர் அடையாள அட்டைகளை சரிபார்ப்ப தற்காக தனி கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு, ஆவணங்களை சரிபார்த்த பிறகு போலீசார் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்து வாக்குச்சாவடி அதிகாரி முன்னிலையில் பெட்டியில் போட்டனர்.
இதே போல கோவை புறநகர் போலீசார் வாக்களிப்பதற்காக போலீஸ் பயிற்சி மையத்தில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த சிறப்பு மையம் நேற்று ஒரு நாள் மட்டுமே செயல்பட்டது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தேர்தல் அன்று அவர்களின் முகவரிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று நேரடியாக வாக்களிக்க முடியாது. எனவே அவர்கள் தபால் ஓட்டு போட அனுமதிக்கப்படுகிறார் கள். அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வாக்களிக்க வசதியாக சிறப்பு மையம் அமைக்கப்பட்டது.
அங்கு, வாக்களிப்பதற்கும் தபால் ஓட்டை அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது. சிறப்பு மையத்தில் தபால் வாக்குச்சீட்டு உடனே வழங்கப்படும். வாக்களிப்பவரை அடையாளம் காண்பதற்கும், தபால் வாக்கை அங்கீகரிப்பதற்கும் வாக்குச்சாவடி அதிகாரி அங்கேயே இருப்பார்.
இதனால் அந்தந்த தொகுதி வாக்குச்சீட்டை அங்கேயே பெற்று ஓட்டு போட்டு விடலாம்.
இல்லை என்றால் தபால் வாக்குச்சீட்டை பெற்று, தாங்கள் பணியாற்றும் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரிடம் கையெழுத்து பெற்று அந்தந்த வாக்குச்சாவடி அதிகாரியின் சான்றிதழ் பெற்று தபால் மூலம் வாக்குகளை அனுப்ப வேண்டும்.
அல்லது போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள பெட்டியில் போட வேண்டும்.
எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் சிறப்பு மையத்தில் வாக்களிப்பது எளிதானது. அதனால் தான் பெரும்பாலான போலீசார் சிறப்பு மையத்தில் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story