தபால் வாக்குகளை பதிவு செய்த போலீசார்
கடலூர் மாவட்டத்தில் போலீசார் நேற்று தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.
கடலூர்,
தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதில் தபால் ஓட்டுகள் பெறும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தபால் வாக்களிக்க விருப்பம் உள்ளவர்களை கணக்கெடுக்கப்பட்டு, விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதில் 4,757 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இதுவரை 4,400 பேரிடம் தபால் வாக்கு பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2,522 போலீசார் நேற்று தபால் வாக்குகளை செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில், கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு கடலூர் தாலுகா அலுவலகத்தில் போலீசார் தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி தாலுகா அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போலீசார் தங்களது தபால் வாக்குகளை போட்டு விட்டு சென்றனர்.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் தபால் வாக்குகளை செலுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தபால் வாக்கு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நடவடிக்கை
காவல்துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அந்த மையங்களுக்கு சென்று தங்களது தபால் வாக்கை செலுத்தி வருகின்றனர். தபால் வாக்குகளை செலுத்துபவர்கள் நேரில் வந்து தான் செலுத்த வேண்டும். அரசியல் கட்சியினர் யாரிடமும் தபால் வாக்குகளை தரக்கூடாது. இதை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தபால் வாக்குகுள் செலுத்துபவர்கள் அந்த மையத்தில் வைக்கப்பட்டு இருக்கும் நோட்டில் கையொப்பம் இட்டுதான் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story